Loksabha Election : நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி முதல் துவங்க உள்ள நிலையில், நாடுமுழுவதும் போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் துவங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக கர்நாடக போலீசார் நடத்திய சோதனையில் ரூ 5.60 கோடி மதிப்பிலான ரொக்கம், 3 கிலோ தங்கம், 103 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் 68 வெள்ளி கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கர்நாடகாவின் பெல்லாரி நகரில் தான் இந்த் சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 5.6 கோடி மதிப்பிலான ரொக்கக் குவியல்களை போலீஸார் மீட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே போல கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளிக் கட்டிகள், நகைகளும் மீட்கப்பட்டன என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கைப்பற்ற மொத்த நகைகளின் மதிப்பு சுமார் 7.60 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நகைக்கடை உரிமையாளரான நரேஷின் வீட்டில் இருந்து தான் பெரும் பணம் மற்றும் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தேர்தல் நேரத்தில் இவ்வளவு நகை மற்றும் பணம் சிக்கியுள்ள நிலையில் நரேஷை தற்போது காவலில் எடுத்து விசாரித்து வருவதாக போலீசார் அளித்த தகவலில் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் ஹவாலா தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், கர்நாடகா போலீஸ் சட்டம் பிரிவு 98ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணையில் கிடைத்த தகவல்கள், மேலதிக விசாரணைக்காக வருமான வரித்துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என கர்நாடக போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.