மசூதியில் பிரார்த்தனை செய்ய பெண்களுக்கு தடையில்லை...! அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தகவல்...!

By Asianet TamilFirst Published Jan 30, 2020, 5:52 PM IST
Highlights

மசூதியில் பிரார்த்தனை செய்ய முஸ்லிம் பெண்கள் தாராளமாக வரலாம். அதேவேளை, நீதிமன்றம் மத நடைமுறைகளில் தலையிடுவது பொருத்தமானதல்ல என அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

சபரிமலை வழக்குடன், மசூதிகளில் பெண்களை அனுமதிப்பது மற்றும் பிற மத ஆண்களை திருமணம் செய்த பார்சி பெண்களை தங்கள் வழிபாட்டு தலங்களில் அனுமதி அளிப்பது தொடர்பான வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது. இந்த வழக்குகள் விசாரணையை 10 நாட்களில் முடிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.


இந்நிலையில் வழிபாட்டு தலங்களில் சென்று வழிபடுவது பெண்களின் உரிமை தொடர்பான மனுக்களுக்கு அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கூறியிருப்பதாவது: முஸ்லிம் பெண் மசூதிக்கு சென்று தாராளமாக  பிரார்த்தனை செய்யலாம். அது போன்ற வசதிகளை பயன்படுத்துவது அந்த பெண்ணின் விருப்பம். அதேசமயம், பெண்கள் சபை பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பது இஸ்லாமில் கட்டாயமாக்கப்படவில்லை. 


இதில், எந்தவொரு மாறுப்பட்ட மத கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. அதேசமயம், முஸ்லிம் பெண்கள் மசூதிக்குள் நுழைவது மதகளத்திற்குள் உள்பட்டது என்பது வாரியத்தின் வலுவான கருத்தாகும். மனுவில் எழுப்பட்ட கேள்விகள் மத கொள்கைளின் கோட்பாடுகள் மற்றும் இஸ்லாமின் கருத்துக்களுக்கு நேரடியாக தொடர்பானவை. ஆகையால் உச்ச நீதிமன்றம் மத நடைமுறைகளில் தலையிடுவது பொருத்தமானதல்ல. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!