உ.பி.யில் மாயாஜாலம் நிகழ்த்துவாரா பிரியங்கா காந்தி.? பெண்கள் ஓட்டுக்காக இலவச அறிவிப்புகள் வாரி இறைப்பு.!

By Asianet TamilFirst Published Nov 1, 2021, 8:52 PM IST
Highlights

தேர்தலையொட்டி கடந்த மாதம், 12-ஆம் வகுப்பு முடித்த பெண்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும், கல்லூரி படிப்பை முடித்த பெண்களுக்கு இ.ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி கவர்ச்சிக்கரமான அறிவிப்பை வெளியிட்டார். 
 

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், பெண்கள் வாக்குகளைக் கவரும் உத்தியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இறங்கியுள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில், மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் களைக்கட்டியிருக்கிறது. பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை தேர்தல் பிரசாரத்தில் இப்போதே ஈடுபடத் தொடங்கி விட்டன. கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

எனவே, இந்த முறை குறிப்பிடத்தக்க வெற்றியை பெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி முனைப்பாக உள்ளது. இந்த முறை உத்தரப்பிரதேச தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி பிரியங்கா காந்தியை களம் இறக்கிவிட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் உ.பி, தேர்தல் இதுதான். எனவே, பிரியங்கா காந்தி மாநிலம் முழுவதும் சுற்றி வருகிறார். தேர்தலையொட்டி கடந்த மாதம், 12-ஆம் வகுப்பு முடித்த பெண்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும், கல்லூரி படிப்பை முடித்த பெண்களுக்கு இ.ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி கவர்ச்சிக்கரமான அறிவிப்பை வெளியிட்டார். 

இந்நிலையில் பெண்களை மையப்படுத்தி மேலும் பல அறிவிப்புகளை பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ளார். அதன்படி இலவச எல்பிஜி சிலிண்டர், பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் போன்ற அறிவிப்புகளை பிரியங்கா அதிரடியாக வெளியிட்டுள்ளார். மேலும் தேர்தலில் 40 சதவீதம் பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவுள்ளதாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகள் கடன் முழுமையாக தள்ளுபடி, கோதுமை, நெல் ஆகியவை குவிண்டாலுக்கு ரூ.2,500க்கு வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளை பிரியங்கா அளித்துள்ளார்.

இந்நிலையில் பிரியங்கா காந்தி இன்று ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தவுடன், ஆண்டுதோறும் பெண்களுக்கு 3 எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். மாநில அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்” என்று ஏற்கனவே அறிவித்த அறிவிப்புகளை உறுதி செய்து அதில் பதிவிட்டுள்ளார். 

click me!