கலைக்கட்டியது புதுச்சேரி விடுதலை நாள்… கொடியேற்றினார் முதல்வர் ரங்கசாமி!!

By Narendran SFirst Published Nov 1, 2021, 10:40 AM IST
Highlights

புதுச்சேரி விடுதலை நாளையொட்டி இன்று கடற்கரை சாலையில் நடைபெற்‌ற நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 

இந்தியாவை பிரிட்டிஸ்காரர்கள் ஆட்சி செய்து வந்தனர். பிரெஞ்சுகாரர்களும் பிரிட்டிஸ்காரர்களும் செய்துகொண்ட உடன்படிக்கை மூலம் பல்வேறு பகுதிகளாக பிரிந்து இருந்த இந்தியாவின் சில பகுதிகள் பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. அதில் புதுசேரியும் ஒன்று. இதனிடையே பிரெஞ்சு நாட்டு  கட்டுப்பாட்டின் கீழ் இருந்த இந்தியாவிற்கு, 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. ஆனால் பிரெஞ்சுக்காரர்கள் கட்டுப்பாட்டில் இருந்த புதுச்சேரிக்கு அப்போது சுதந்திரம் கிடைக்கவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்து ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்கு பிறகு 1954 ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்களிடம் இருந்து புதுச்சேரிக்கு சுதந்திரம் கிடைத்தது. இதையடுத்து இந்தியாவுடன் புதுச்சேரி இணைக்கப்பட்டது. ஆளுநர் மாளிகையில் 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி பிரெஞ்சு கொடி இறக்கப்பட்டு இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இருந்த போதிலும் இந்தியாவுடன் புதுச்சேரி இணைந்ததற்கான ஒப்பந்தத்திற்கு 8 ஆண்டுகளுக்கு பின் 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதியன்று பிரெஞ்சு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. அதுவரை நவம்பர் 1 ஆம் தேதியன்று புதுச்சேரி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வந்தது. 1962 ஆம் ஆண்டுக்கு பின் புதுச்சேரியின் சுதந்திர தினம் நவம்பர் 1 ஆம் தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் 16 ஆம் தேதியாக மாற்றப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் புதுச்சேரியின் உண்மையான விடுதலை நாள் நவம்பர் 1 ஆம் தேதி என்றும் அன்றைய தினத்தையே விடுதலை நாளாக கொண்டாட வேண்டும் என பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1 ஆம் தேதியை புதுச்சேரி விடுதலை நாளாகவும், அரசு விடுமுறை தினமாகவும் புதுச்சேரி அரசு அறிவித்தது. அன்று முதல் வருடம்தோறும் நவம்பர் 1 ஆம் தேதி புதுச்சேரி விடுதலை நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று புதுச்சேரி அரசின் சார்பில் விடுதலை நாள் விழா கடற்கரை சாலையில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி கடற்கரை சாலையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை அடுத்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றினார்.

பின்னர் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு அதனை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், புதுச்சேரியின் பழைமை வாய்ந்த புராதன வரலாற்று சின்னங்களை பாதுகாக்க ரூ.107 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த விழாவில் பேரவைத் தலைவர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்கின்றனர். இதற்கிடையே விடுதலைநாளையொட்டி கடற்கரை சாலையில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக காந்தி திடல் வடக்கு பகுதி பந்தலில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டவர்கள் அவர்களது வாகனங்களை கேம்பெயின் வீதி, செயிண்ட் மார்டின் வீதி, ரோமன் ரோலண்ட் நூலகம் எதிரில், லா தே லோரிஸ்தான் வீதியில் செயிண்ட் லூயிஸ் வீதியில் இருந்து தலைமை செயலகம் வரை வாகனங்களை நிறுத்திவிட்டு கடற்கரை சாலை மற்றும் நேரு சிலை பின்புறமாக நடந்து சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்தனர். காந்தி வீதி தெற்கு பந்தலில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டவர்கள் துமாஸ் வீதி, பழைய நீதிமன்றம் சந்திப்பில் இருந்து பழைய துறைமுகம் வரையும், சுப்பையா சாலை, பசார் செயிண்ட் லாரண்ட் வீதியில் வாகனங்களை நிறுத்திவிட்டு கடற்கரை சாலை வழியாக நடந்து சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்தனர். விடுதலை நாளையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை, ஆளுநர் மாளிகை, பாரதி பூங்கா உள்ளிட்ட பகுதிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைத்துள்ளது. 

click me!