
அமெரிக்காவில் வீசிய பயங்கர சூறாவளியால் பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருட்களின் விலை உயரவில்லையே ஏன்? என சிவசேனா கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்கிறது. இதனை கண்டித்து சிவசேனா சார்பில் மும்பையில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் , பெட்ரோல்- டீசல் விலை உயர்வு பற்றி கருத்து தெரிவித்த மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான், “அமெரிக்காவில் இர்மா, புயல் தாக்கியதால், இங்கு எரிபொருட்களின் விலை உயர்கிறது.
மேலும், சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலை குறைவதால், அடுத்த சில நாட்களில் பெட்ரோல்- டீசல் விலை குறையும்” என்று கூறி இருந்தார்.
அவரது கருத்தை விமர்சித்து சிவசேனா பத்திரிகையான ‘சாம்னா’வில் தலையங்கம் வெளியானது. அதில், கூறி இருப்பதாவது:-
பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு ஹரிகேன் புயல் தான் காரணம் என்றால் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் எரிபொருட்களின் விலை உயராதது ஏன்? இந்தியாவில் மட்டும் ஏன் உயர்கிறது?
மோடி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டின் வளர்ச்சி வீதம், தொழில்மயமாக்கம் குறைந்துவிட்டது.
மாறாக, வேலையில்லா திண்டாட்டமும், பணவீக்கமும் அதிகரித்து விட்டது. கல்வி முதல் கொத்தமல்லி இலை, சர்க்கரை வரை அனைத்தும் விலையேறிவிட்டது.
சிவசேனா எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் மோடி அலை காரணமாக தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறுபவர்கள், கடந்த 25-30 ஆண்டுகளாக சிவசேனா அலையால்தான் தாங்கள் உயிர் வாழ்ந்ததை மறந்துவிட்டார்கள்.
மோடி அலை ஆற்றல்வாய்ந்தது என்றால், பொதுமக்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாதது ஏன்? ஒவ்வொரு நாளும் பொதுமக்களிடம் இருந்து கொள்ளையடிப்பது ஏன்?.
இவ்வாறு அதில் சிவசேனா தெரிவித்துள்ளது.