
உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் மாநிலங்களில் உள்ள காவல்துறையை நவீனப்படுத்துவதற்காக வரும் மூன்றாண்டுகளுக்கான செலவினமாக 25,060 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான மத்திய கேபினட் கூட்டம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது.
உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் மாநிலங்களில் உள்ள காவல்துறையை நவீனப்படுத்துவதற்காக வரும் மூன்றாண்டுகளுக்கான செலவினமாக 25,060 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வது என இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
முந்தைய ஒதுக்கீட்டைவிட இரண்டரை மடங்கு இந்த நிதி அனைத்து மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் இதன்மூலம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் 6 ஆயிரத்து 444 கோடி ரூபாய் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையில் இருந்து இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாயும், வடகிழக்கு மாநிலங்களுக்கு 100 கோடி ரூபாயும் மத்திய அரசின் சிறப்பு நிதியாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.