‘லைசன்ஸ்’ இருந்தால்தான் அனுமதி - மத்திய அரசு அதிரடி உத்தரவு

First Published Sep 27, 2017, 6:27 PM IST
Highlights
Tobacco products should not be sold in stores including sweets biscuits chips and soft drinks


இனிப்பு வகைகள், பிஸ்கட், சிப்ஸ் மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது, பீடி, சிகிரெட், உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தனி அங்கீகாரம் பெற வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

விளைவுகள் 

சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை உட்கொள்வதால் உடல் நலம் பாதிக்கப்படும். இதனால் ஏற்படும் கடுமையான விளைவுகள் குறித்து மத்திய அரசு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை, சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் நுகர்வை ஊக்குவிக்கும் வகையில் மறைமுகமாகவும் நேரடியாகவும் விளம்பரம் செய்ய தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

மேலும் பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் 1 கிலோ மீட்டர் சுற்றுபுறத்தில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்தது. மேலும் சிறுவர்களுக்கு புகையிலை விற்பனை செய்தால் கடைகாரர்களுக்கு கடும் சிறை விதிக்கப்படும். அதிகபட்சம் 7 ஆண்டு வரை கடும் சிறை விதிக்கப்படும்.  இது போன்ற கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் புகையிலை பழக்கத்துக்கு அடிமையாகி வருவது அதிகரித்து வருகிறது.  

சிறுவர்கள் 

இந்த நிலையில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய உரிமம் பெற்ற கடைக்காரர்கள் இனிப்பு வகைகள், சிப்ஸ் மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்ட சிறுவர்கள் அதிகம் நுகரும் பொருட்களை விற்பனை செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது. 

இது குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர் அருண் குமார் ஜா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: புகையிலை விற்பனையாளர்கள் சிப்ஸ் இனிப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. புகையிலை பொருட்கள் மீது குழந்தைகள் மற்றும் சிறுவர்கள்  பார்வை செல்லாமல் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம்.

அனுமதி

மேலும் புகையிலை பொருட்கள் மீதான ஒழுங்குமுறை விதிமுறைகளை மேலும் திறம்பட செயல்படுத்த இது உதவிகரமாக இருக்கும். நகராட்சி அமைப்புகள் சில்லரை விற்பனை கடைக்காரர்களுக்கு அனுமதி வழங்கும் அமைப்பை மேலும் வலுப்படுத்தும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

click me!