மக்களவை சபாநாயகர் பதவி யாருக்கு என்பதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் மற்றும் அக்கூட்டணியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி 3ஆவது முறையாக பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து முறைப்படி தனது அலுவலகத்தில் அவர் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னதாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிரதமர் மோடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடி தவிர 71 பேர் அமைச்சர்களாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மத்தியில் கூட்டணி ஆட்சியே அமைந்துள்ளது. குறிப்பாக, நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் ஆதரவு பாஜகவுக்கு கண்டிப்பான முறையில் தேவைப்படுகிறது. எனவே, அந்த இரு கட்சிகள் உள்பட கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகளை சேர்ந்த 11 பேருக்கு மத்திய அமைச்சர் பதவியை ஏற்கனவே பாஜக வழங்கியுள்ளது. தொடர்ந்து, யாருக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என்பது மீதான எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் சில முக்கியத்துறைகளை கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், மக்களவை சபாநாயகர் பதவி யாருக்கு என்பதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சபாநாயகர் பதவி தங்களுக்கே வேண்டும் என்று கேட்டு தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. ஆனால், சபாநாயகர் பதவியை அவர்களுக்கு தர பாஜக விரும்பவில்லை என தெரிகிறது. இதனிடையே, சபாநாயகர் பதவிக்கான தேர்தல் வருகிற 20ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறுத்தை? மோடி அமைச்சரவை பதவியேற்பில் தென்பட்ட மிருகம்..!
சபாநாயகர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
அரசியலமைப்புச் சட்டத்தின்படி, புதிய மக்களவை முதன்முறையாக கூடுவதற்கு முன்பாகவே சபாநாயகர் பதவி காலியாகி விடும். குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட தற்காலிக சபாநாயகர் புதிய எம்.பி.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். இதையடுத்து, மக்களவை சபாநாயகர் தனிப்பெரும்பான்மை ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்படுகிறார். சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு குறிப்பிட்ட அளவுகோல் எதுவும் இல்லை என்றாலும், அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற விதிகளை புரிந்துகொள்வது கூடுதல் நன்மை. கடந்த இரண்டு மக்களவையிலும் பாஜக பெரும்பான்மையுடன் இருந்ததால், சுமித்ரா மகாஜனும், ஓம் பிர்லாவும் சபாநாயகராக இருந்தனர்.
கடினமான சபாநாயகர் பதவி
மக்களவை சபாநாயகர் பதவி கடினமானது. சபையை நடத்தும் ஒருவர் என்ற வகையில், சபாநாயகர் பதவி கட்சி சார்பற்றதாக இருக்க வேண்டும். ஆனால், ஏதேனும் ஒரு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரே மதிப்புமிக்க சபாநாயகர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். நாட்டின் 4ஆவது மக்களவையின் சபாநாயகாரக தேர்வான காங்கிரஸ் மூத்த தலைவர் என்.சஞ்சீவ ரெட்டி, சபாநாயகராக பொறுப்பேற்றதும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது.
ஆனால், பிஏ சங்மா, சோம்நாத் சாட்டர்ஜி மற்றும் மீரா குமார் போன்றவர்கள் கட்சியில் இருந்து முறையாக ராஜினாமா செய்யவில்லை. இருப்பினும், தாங்கள் சபைக்கானவர்கள் எனவும், ஒரு கட்சியை சார்ந்தவர்கள் அல்ல எனவும் பல சந்தர்பங்களில் உறுதி படுத்தியுள்ளனர். UPA அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது கட்சி சார்பற்ற நிலைப்பாட்டிற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து சோம்நாத் சாட்டர்ஜி நீக்கப்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது.
சபாநாயகர் பதவிக்கு கூட்டணி கட்சிகள் ஏன் அழுத்தம் கொடுக்கின்றன?
சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள். இதனால், சபாநாயகர் பதவியை தங்களுக்கான பாதுகாப்பாக அவர்கள் இருவரும் கருதுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் ஆளும் அரசுகளில் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. கட்சிகள் இரண்டாக உடைந்துள்ளன. அரசாங்கங்கள் கவிழ்ந்துள்ளன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், கட்சித் தாவல் தடைச் சட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்த சட்டம் சபாநாயகருக்கு மிகவும் சக்திவாய்ந்த பதவியை வழங்குகிறது. உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக முடிவெடுக்கும் முழு அதிகாரமும் சபாநாயகருக்கு உண்டு. தனது கட்சியை உடைக்க பாஜக முயற்சிப்பதாக கடந்த காலங்களில் நிதிஷ் குமார் குற்றம் சாட்டியிருக்கிறார். எனவே, சபாநாயகர் பதவியை ஒரு கேடயமாக கிங் மேக்கர்கள் விரும்புகிறார்கள்.