சிக்கிம் முதல்வராக பிரேம் சிங் தமாங் இன்று பதவியேற்கவுள்ளார்
சிக்கிம் முதல்வராக சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவின் (எஸ்கேஎம்) சட்டமன்றக் கட்சித் தலைவர் பிரேம் சிங் தமாங் இன்று பதவியேற்கவுள்ளார். அம்மாநில தலைநகர் கேங்டாகில் உள்ள பல்ஜோர் மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரேம் சிங் தமாங் மற்றும் அவரது அமைச்சர்கள் குழுவுக்கு அம்மாநில ஆளுநர் லக்ஷ்மண் ஆச்சார்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார்.
இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள பிரேம் சிங் தமாங், கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கூட்டத்தில் அக்கட்சியின் சட்டமன்றக் கட்சியின் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் 30,000 பேர் பங்கேற்கும் பதவியேற்பு விழா மாலை 4 மணிக்கு தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வை முன்னிட்டு கேங்டாக் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மோடி 3.0 கேபினட்... யாருக்கு எந்த துறை? இன்று அமைச்சரவை கூட்டம்!
நாடு முழுவதும் அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலோடு சேர்த்து சில மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில், சிக்கிம் மாநிலத்துக்கு நடைபெற்ற தேர்தலில் அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 32 சட்டமன்றத் தொகுதிகளில் 31 தொகுதிகளில் சிக்கிம் கிராந்திகாரி மோர்சா கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
சிக்கிம் மாநிலத்தில் மொத்தமுள்ள 32 சட்டமன்றத் தொகுதிகளில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று 6ஆவது முறையாக ஒரு கட்சி அமோக வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அந்த சாதனையை படைத்து எலைட் கிளப்பில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி இணைந்துள்ளது. கடந்த காலங்களில், சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் ஒரு கட்சி 30 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களை வென்ற ஐந்து நிகழ்வுகள் நடந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி வரலாற்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.