மோடி 3.0 கேபினட்... யாருக்கு எந்த துறை? இன்று அமைச்சரவை கூட்டம்!

By Manikanda PrabuFirst Published Jun 10, 2024, 12:50 PM IST
Highlights

பிரதமராக நரேந்திர மோடியும், அமைச்சர்களும் பொறுப்பேற்றுள்ள நிலையில், யாருக்கு எந்த துறை ஒதுக்கப்படம் என்பது மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. தேசிய ஜனநாயகக்  கூட்டணியின் தலைவர் மற்றும் அக்கூட்டணியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி 3ஆவது முறையாக பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பிரதமர் மோடி தவிர 71 பேர் அமைச்சர்களாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மத்திய அமைச்சரவையில் மொத்தம் 81 இடம்பெறலாம் என்ற நிலையில், மோடியையும் சேர்த்து தற்போதைய பலம் 72 ஆக உள்ளது. மத்திய அமைச்சரவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளை சேர்ந்த 11 பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. எஞ்சியவர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள். புதிய அமைச்சரவையில் 30 பேர் கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சர்கள். 36 பேர் இணையமைச்சர்கள். 5 பேர் சுயாதீன பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள் ஆவர்.

Latest Videos

ரியாஸி தீவிரவாத தாக்குதல்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

நரேந்திர மோடி நேற்றைய தினம் பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நிலையில், டெல்லியில் உள்ள தனது அலுவலகத்தில் முறைப்படி பிரதமராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச வருமான ஆதரவாக ஆண்டுக்கு ரூ.6000 வழங்கும் பிரதமர் கிசான் சம்மான் நிதியின் (Pradhan Mantri Kisan Samman Nidhi) 17ஆவது தவணையை வெளியிடுவதற்கான கோப்பில் பிரதமர் மோடி தனது முதல் கையெழுத்திட்டார். இதன் மூலம் 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமைச்சரவையில் யாருக்கு எந்த இலாக்கா ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உள்துறை, பாதுகாப்பு, வெளிவிவகாரம் மற்றும் நிதித்துறை ஆகிய 4 முக்கியத்துறைகளை பாஜக தன் வசம் வைத்துக் கொள்ளும் என கூறப்படுகிறது. இந்த துறைகளின் தற்போதைய அமைச்சர்களே மீண்டும் அந்த துறைகளுக்கு நியமிக்கப்படுவார்கள் என தெரிகிறது.

பாஜக தேசிய தலைவராக உள்ள ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால், தேர்தலை மனதில் வைத்து அவரது பதவிக்காலம் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கும் அவரும் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். எனவே, அவருக்கு முக்கியத்துறை ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜே.பி.நட்டா இமாச்சலப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். ஐந்து முறை தொடர்ந்து எம்..பி.யாக இருக்கும் அனுராக் தாக்கூரும் அதே மாநிலத்தை சேர்ந்தவர். ஜே.பி.நட்டாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாலேயே அதே மாநிலத்தை சேர்ந்த அனுராக் தாக்கூருக்கு அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே, மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்கூட்டத்திற்கு பிறகு அமைச்சரவை இலாக்காக்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!