வீட்டுக்கே சென்று சந்திக்கும் ரஜினி... முதலைகளுக்கு எதிரிகள் இரை? யார் இந்த ராஜா பையா?

By Manikanda Prabu  |  First Published Aug 26, 2023, 7:30 PM IST

நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் ராஜா பையா என்பவரை சந்தித்தது கடும் சர்ச்சையாகியுள்ளது


ஜெயிலர் படம் திரைக்கு வரும் முன்னரே, நடிகர் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டு சென்றார். இமயமலைக்கு அவர் செல்வது வழக்கமான் ஒன்றுதான் என்றாலும், இந்த முறை அவரது பயணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு வட மாநிலங்களில் ஆன்மீக சுற்றுலா மேற்கொண்ட ரஜினிகாந்த், உத்தரப்பிரதேச மாநிலம் சென்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். அப்போது அவரது காலில் ரஜினிகாந்த் விழுந்தது சர்ச்சையானது. மேலும், அகிலேஷ் யாதவையும் ரஜினி சந்தித்தார்.

இது எல்லாவற்றிக்கும் மேலாக ஜனசத்தா தள கட்சியின் தலைவர் ரகுராஜ் பிரதாப் சிங் எனும் ராஜா பையா என்பவரை அவர் சந்தித்ததுதான் பெரும் சர்ச்சையானது. இவர் அம்மாநிலம் குந்தா தொகுதி எம்.எல்.ஏ. ஆவார். ஒரு சாதாரண எம்.எல்.ஏ.வும், கட்சித் தலைவருமான அவரை ரஜினி சந்தித்தது ஏன் இவ்வளவு சர்ச்சையாக வேண்டும் என்ற கேள்வி அனைவருக்கும் எழலாம். ஆனால், ராஜா பையாவின் வரலாறு அத்தகையது.

Tap to resize

Latest Videos

ரகுராஜ் பிரதாப் சிங் குந்தாவில் உள்ள அரண்மை போன்ற வீட்டில் வசிப்பவர். வாரம் தோறும் தனது வீட்டில் பழங்கால அரசர்கள் போல தர்பார் நடத்தி பொதுமக்களிடம் குறைகளை கேட்டு இன்றும் நிவர்த்தி செய்து வருகிறார். அவரது தாத்தா பஜ்ரங் பகதூர் சிங், பந்த் நகர் வேளாண்மை பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் ஆவார். பின்னர் இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் இரண்டாவது ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். அவருக்கு குழந்தைகள் கிடையாது. எனவே, தனது சகோதரர் மகனான உதய் பிரதாப் சிங்கை எடுத்து வளர்த்தார். ஆனால், உதய் பிரதாப் சிங், ஒரு துணை வேந்தரின் மகன் போல வளரவில்லை. ஆயுதங்களை வைத்துக் கொண்டு கிரிமினலாக வலம் வந்தார். தனி நாடு அமைப்பதுதான் தனது லட்சியம் என கூறிவந்தார்.

இந்த உதய் பிரதாப் சிங்கின் மகன் தான் ரகுராஜ் பிரதாப் சிங் எனும் ராஜா பையா. ராஜா பையா கொல்கத்தாவில் 1969ஆம் ஆண்டு பிறந்தவர். லக்னோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அவருக்கு, பாஹ்ன்வி குமாரி சிங் என்ற மனைவியும், இரண்டு மகள்களும், இரண்டு மகள்களும்  உள்ளனர். பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்த ரகுராஜ் பிரதாப் சிங் மற்றும் அவரது தந்தை உதய் பிரதாப் சிங் ஆகியோரது பெயர்கள் 1990களின் இறுதியில் குந்தா காவல்நிலைய குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், ஆதுதான் உண்மை. இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

ரகுராஜ் பிரதாப் சிங் தனது 24 வயதில் 1993 சுயேட்சையாக போடியிட்டு குந்தா தொகுதியில் வெற்றி பெற்றார். அன்று முதல் இன்று வரை அவர்தான் அந்த தொகுதியின் அசைக்க முடியாத எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். பிரதாப்கர் பகுதியில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளிலும், அண்டை மாநிலமான பீகாரில் சில தொகுதிகளிலும் கணிசமான செல்வாக்கைக் கொண்டுள்ளார். அந்த பகுதிகளில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் வெறும் நிழல்தான். அந்த அளவுக்கு ராஜா பையாவின் செல்வாக்கு அதிகம். தேர்தல் பிரசாரங்களில் வேட்பாளர்களின் பெயர்களை கூட குறிப்பிட மாட்டார். ஏனெனில் விழும் வாக்குகள் ராஜா பையா என்ற ஒருவருக்குதான் விழுகிறது.

உத்தரபிரதேசத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அவர்களை அனுசரித்து செல்லும் பழக்கம் கொண்டவர் ராஜா பையா. ஆனால், அவர்களுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டார். சுயேட்சையாகவே நிற்பார்; அபார வெற்றியும் பெறுவார். ஆனால், எந்த கட்சியுடனும் அரவணைத்து செல்லும் அவருக்கு மாயாவதியுடன் மட்டும் முரண் உள்ளது. 2007 தேர்தலுக்குப் பிறகு, மாயாவதி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தபோது, ரகுராஜ் பிரதாப் சிங் மீண்டும் போலீஸ் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டார். அந்த தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் வேட்பாளரை ராஜா பையா தோற்கடித்திருந்தார். 2017 தேர்தலில் பாஜக வேட்பாளரை தோற்கடித்த அவர், 2018ஆம் ஆண்டில் ஜனசத்தா தள் எனும் தனிக்கட்சியை ஆரம்பித்தார். 2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜா பையா, 1993 முதல் 2022ஆம் ஆண்டு வரை குந்தா சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து 7ஆவது முறையாக எம்.எல்.ஏ.வாக உள்ளார். 

1995ஆம் ஆண்டில் ராஜா பையாவின் பூர்வீக கிராமத்துக்கு அருகில் நடந்த சம்பவம் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியது. அந்த கிராமத்தில் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. 3 சிறுமிகள் உள்பட 4 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு ஆற்றில்  வீசப்பட்டனர். இரண்டு பெண்கள் தானாக ஆற்றுக்குள் குதித்து விட்டதாக செய்திகள் வெளியாகின. 

மதுரை ரயில் தீ விபத்து - சுற்றுலா நிறுவனம் மீது வழக்குப் பதிவு!

ராஜா பையாவின் ஆட்களுக்கு வரி கட்ட மறுத்ததால் சிறுபான்மை சிறுவன் அடித்து ஜீப்பில் கட்டப்பட்டு இழுத்து ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். இதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக 37 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தால் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். அதன்பிறகு ராஜா பையா அடிக்கடி செய்திகளில் அடிபட்டு பிரபலமானார்.

1996இல் தேர்தல் பாஜக மூத்த தலைவரான கல்யான் சிங், ராஜா பையாவுக்கு எதிராக பிரசாரம் செய்தார். இருப்பினும், பாஜக வேட்பாளரை தனது தொகுதியில் ராஜா பையா தோற்கடித்தார். இதில், சுவாரஸ்யம் என்னவென்றால், முதல்வரான கல்யான் சிங், ராஜா பையாவுக்கு அமைச்சர் பதவி கொடுத்தார். 2002 ஆம் ஆண்டில், பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ.வான பூரன் சிங் பண்டேலா கடத்தப்பட்டு, மிரட்டப்பட்டதாக அவர் அளித்த புகாரில் ரகுராஜ் பிரதாப் சிங் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. அதன் மீது நடவடிக்கை எடுத்த அப்போதைய முதல்வர் மாயாவதியின் உத்தரவின் பேரில், அதிகாலை 4:00 மணியளவில் ரகுராஜ் பிரதாப் சிங் கைது செய்யப்பட்டார்.

உத்தரபிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான அரசாங்கம் ரகுராஜ் பிரதாப் சிங்கை பயங்கரவாதியாக அறிவித்தது, மேலும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (POTA) கீழ் ரகுராஜ் பிரதாப் சிங், அவரது தந்தை உதய் பிரதாப் சிங், உறவினர் அக்‌ஷய் பிரதாப் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில், ரகுராஜ் பிரதாப் சிங்கால் ஜாமீன் கூட  பெற முடியவில்லை. ஆனால், அதற்கு பின்னர், முலாயம் சிங் முதல்வராக பொறுப்பேற்ற 25 நிமிடங்களில் ராஜா பையா மீதான POTA வழக்கு ரத்து செய்யப்பட்டது. இதனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தாலும், 2004ஆம் ஆண்டில் POTA சட்டமே ரத்து செய்யப்பட்டது. ஆனாலும், உச்ச நீதிமன்றம் அவரை விடுவிக்க மறுப்பு தெரிவித்தது.

இந்த சமயத்தில் உத்தரப்பிரதேசத்தில் சக்திவாய்ந்த மனிதராக ராஜா பையா உருவெடுத்திருந்தார். 2005 ஆம் ஆண்டில், அவர் உத்தரப்பிரதேச மாநில உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சரானார். குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருந்த போதிலும், அவருக்கு அம்மாநில அரசு Z-வகை பாதுகாப்பு அளித்தது.

நிலவின் சிவசக்தி புள்ளியில் சுற்றும் ரோவர் பிரக்யான்: புதிய வீடியோ வெளியிட்ட இஸ்ரோ!

இதனிடையே, அவரது வீட்டில் சோதனை நடத்தி கைது செய்த காவல்துறை அதிகாரி ஆர்.எஸ். பாண்டே ஒரு சாலை விபத்தில் கொல்லப்படார். அந்த வழக்கை சிபிஐ தற்போது விசாரித்து வருகிறது.  மேலும், குந்தா தொகுதிக்குட்பட்ட ஒரு கிராமத்தின் தலைவர், சகோதரர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தை விசாரிக்க சென்ற டிஎஸ்பி ஜியா உல் ஹக் ஐபிஎஸ் கிராம கும்பல் உடன் மோதலில் கொல்லப்பட்டார். ஐபிஎஸ் அதிகாரி கொல்லப்பட்ட இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தனது கணவர் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் ராஜா பையா இருப்பதாக ஜியா உல் ஹக்கின் மனைவி புகார் அளித்தார். இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. இறுதியாக, 2013ஆம் ஆண்டில் சிபிஐ தாக்க செய்த அறிக்கையில், ராஜா பையா குற்றமற்றவர் என தெரிவிக்கப்பட்டது.

தன் மீது பதியப்பட்ட அனைத்தும் போலி குற்ற வழக்குகள் என கூறும் ராஜா பையா மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், பெரும்பாலான வழக்குகளில் இருந்து விடுதலையும் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும், அப்பகுதி மக்களுக்கு அவர் சொல்வதுதான் வேத வாக்கு. மற்ற எம்.எல்.ஏ.க்களை போல் அல்லாமல், மாமியார் மருமகள் சண்டை, நிலப்பிரச்சினைகளை தீர்த்து வைப்பார். உள்ளூர் மக்களுக்கு அவர் சொல்வதுதான் சட்டம். அவர் நடத்தும் தர்பாருக்கு இன்னும் கூட்டம் வருகிறது. இதுதான் அவரது செல்வாக்கு தொடர்ந்து அதிகரிக்கவும் காரணமாக பார்க்கப்படுகிறது. 

ராஜா பையாவை பற்றி  பல கதைகள் அப்பகுதியில் பிரபலம். குறிப்பாக, தனது எதிரிகளை கொன்று முதலைகளுக்கு அவர் இரையாக வீசி விடுவார் என கூறப்படுகிறது. தனது விட்டுக்கு அருகில் குளத்தில் அவர் முதலைகளை வளர்த்து வருவதாகவும், தனது எதிரிகளை அந்த குளத்தில் தூக்கி வீசி விடுவார் எனவும் கதைகள் கூறப்படுகின்றன. ஆனால், அவை இட்டுக்கட்டப்பட்ட கதை என்கிறார் ராஜா பையா. தனது குழந்தைகள் அங்குதான் நீச்சல் கற்றார்கள் எனவும், தான் அங்கு மீன்களை வளர்ப்பதாகவும் இந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.

இதுபோன்று ஒரு சர்ச்சைக்குரிய ஒருத்தரை நடிகர் ரஜினி சந்தித்ததுதான் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

click me!