
இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான பா.ஜ.க. தரப்பில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த பாய்டாபோசி கிராமத்தில் 1958 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி பிறந்தவர் திரவுபதி முர்மு. இவரின் தந்தை பெயர் பிராஞ்சி நாராயணன் டுடு. ஜார்கண்ட் மாநிலத்தில் அதிக பெரும்பான்மையாக உள்ள சந்தால் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். ஓடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் திரவுபதி முர்மு படித்தார்.
மேலும் செய்திகளுக்கு: ஒரு தடவ தான் தவறும்... அன்று பறிபோன வாய்ப்பு இன்று தேடி வந்தது.. ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு..!
திரவுபதி முர்முக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் பிறந்தனர். இவர்களில் இரண்டு மகன்களும் உயிரிழந்து விட்டனர். அரசியல் ஆர்வம் காரணமாக பா.ஜ.க. கட்சியில் இணைந்தார் திரவுபதி முர்மு. அதன்படி ராய்ரங்பூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
பல்துறை அமைச்சர் பதவி:
மேலும் ஒடிசா மாநிலத்தின் சட்டப்பேரவையில் 2007 ஆம் ஆண்டின் சிறந்த சட்டமன்ற உறுப்பினருக்கான நிலகாந்தா விருது வென்று இருக்கிறார். ஒடிசா அரசு அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் வணிகத் துறை, மீன்வளத் துறை மற்றும் கால்நடை வளர்ச்சித் துறை என பல்வேறு துறை அமைச்சராக பதவி வகித்து இருக்கிறார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை ஜார்க்கண்ட் மாநில ஆளுனராக பதவி வகித்து இருக்கிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுனர் என்ற பெருமையை திரவுபதி முர்மு பெற்று இருக்கிறார். மேலும் ஓடிசா மாநிலத்தில் இருந்து பழங்குடி இனத்தை சேர்ந்த பெண், மாநிலத்தின் ஆளுனராக பதவியேற்றதும் அதுவே முதல் முறை ஆகும்.
குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் ஓடிசா மாநிலத்தில் இருந்து குடியரசு தலைவராகும் முதல் நபர் என்ற பெருமையை திரவுபதி முர்மு பெறுவார். இதோடு, இந்தியாவின் முதல் பழங்குடி இன குடியரசு தலைவர் என்ற பெருமையை திரவுபதி முர்மு பெறுவார். இத்துடன் நாட்டின் இரண்டாவது பெண் குடியரசு தலைவர் என்ற பெருமையையும் இவர் பெறுவார்.
மேலும் செய்திகளுக்கு: திரவுபதி முர்மு தலைசிறந்த ஜனாதிபதியாக இருப்பார்.. அடித்துக் கூறும் பிரதமர் மோடி..!