ரயில்வே வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தலைவராக ஜெய வர்மா சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் ரயில்வே வாரியம் இயங்கி வருகிறது. இந்திய இரயில்வேயின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் மிக உயர்ந்த அமைப்பாக ரயில்வே வாரியம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ரயில்வே வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தலைவராக ஜெய வர்மா சின்ஹாவை மத்திய அரசு நியமித்துள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் 105 ஆண்டுகால வரலாற்றில் அந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை ஜெய வர்மா சின்ஹா பெற்றுள்ளார்.
அலகாபாத் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியான ஜெய வர்மா சின்ஹா, 1988ஆம் ஆண்டில் இந்திய ரயில்வே போக்குவரத்து சேவையில் (IRTS) பணியில் சேர்ந்தார். வடக்கு இரயில்வே, தென்கிழக்கு இரயில்வே மற்றும் கிழக்கு இரயில்வே ஆகிய மூன்று இரயில்வே மண்டலங்களில் அவர் பணிபுரிந்துள்ளார்.
இந்திய ரயில்வே மேலாண்மை சேவைகள் (IRMS), உறுப்பினர் (செயல்பாடுகள் மற்றும் வணிக மேம்பாடு), ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பதவிக்கு ஜெய வர்மா சின்ஹாவை நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ஒய்.எஸ்.ஷர்மிளாவின் டெல்லி பயணம் எங்களுக்கு தெரியாது: ஒய்.எஸ்.ஆர்.டி.பி கட்சி!
ரயில்வே வாரியத்தின் தற்போதைய தலைவராக அனில் குமார் லஹோட்டி உள்ளார். அவரது பதவிக்காலம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் (இன்று) முடிவடைகிறது. இதையடுத்து, ஜெய வர்மா சின்ஹா செப்டம்பர் 1ஆம் தேதி ரயில்வே வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்கவுள்ளார். அவரது பதவிக்காலம் ஆகஸ்ட் 31, 2024 அன்று முடிவடைகிறது. ஆனால், ஜெய வர்மா சின்ஹா வருகிற அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார். இருப்பினும், வாரியத் தலைவரின் மீதமுள்ள பதவிக்காலத்தை பூர்த்தி செய்யும் பொருட்டு, அதே நாளில் அவர் மீண்டும் பணியமர்த்தப்படுவார்.
ஒடிசாவில் கிட்டத்தட்ட 300 பேரை பலி வாங்கிய ரயில் விபத்துகளையடுத்து, ரயில்வேயின் முகமாக பொதுவெளியில் ஜெய வர்மா சின்ஹா அறியப்பட்டார். விபத்து குறித்தும், சிக்னல் கோளாறு குறித்தும் ஊடகங்களிடம் அவர் விளக்கம் அளித்தது நினைவுகூரத்தக்கது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் ரயில்வே ஆலோசகராக நான்கு ஆண்டுகள் பணியாற்றியபோது, கொல்கத்தா மற்றும் டாக்காவை இணைக்கும் மைத்ரீ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கியதில் ஜெய வர்மா சின்ஹா முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.