ஒய்.எஸ்.ஷர்மிளாவின் டெல்லி பயணம் பற்றி தங்களுக்கு தெரியாது என அவரது கட்சியின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருங்கிணைந்த ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மறைவையடுத்து, காங்கிரஸ் உடனான மோதல் காரணமாக, அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எனும் தனிக்கட்சியை ஆரம்பித்தார். ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2021ஆம் ஆண்டில் ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா எனும் தனிக்கட்சியை ஆரம்பித்து அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவை எதிர்த்து கடுமையாக அரசியல் செய்து வரும் ஒய்.எஸ்.ஷர்மிளா, தனது கட்சியை காங்கிரஸ் உடன் இணைக்கப் போவதாக சமீப நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், டெல்லியில் சோனியா, ராகுலை ஒய்.எஸ்.ஷர்மிளா சந்தித்துள்ளார். மும்பை எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு முன்பாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. முன்னதாக, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரையும் ஒய்.எஸ்.ஷர்மிளா சந்தித்திருந்தார்.
தெலங்கானா மாநிலத்துக்கு நடப்பாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், பாஜக, பாரத் ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகள் முனைப்பு காட்டி வரும் நிலையில், கே.சி.ஆருக்கு அரசியல் நெருக்கடி கொடுத்து வரும் ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் உடன் தனது கட்சியை இணைக்கப் போவதாக வெளியாகி வரும் தகவல்களுக்கு மத்தியில் சோனியா, ராகுல் ஆகியோரை சந்தித்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் கட்சியுடன் தனது கட்சியை இணைப்பதா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தேன். இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது. ஒய்எஸ் ராஜசேகர் ரெட்டியின் மகளான நான் தெலங்கானா மக்களின் நலனுக்காக அயராது பாடுபடுவேன். நான் ஒன்று சொல்ல முடியும், கே.சி.ஆருக்கான கவுண்ட்டவுன் தொடங்கி விட்டது.” என்றார்.
“ஒய்எஸ்ஆர்டிபியின் தலைவர்களோ அல்லது தொண்டர்களோ எவருக்கும் ஷர்மிளாவின் டெல்லி பயணம் மற்றும் காந்தி குடும்பத்தினரை சந்தித்தது தெரியாது.” என ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் செய்தித் தொடர்பாளர் கொண்டா ராகவ ரெட்டி தெரிவித்துள்ளார். கட்சித் தலைவரின் டெல்லி பயணம் தங்களுக்கு தெரியாது என செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.