குடியரசுத் தினம் ஜனவரி 26-இல் கொண்டாட என்ன காரணம்.? 73 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு ஃபிளாஷ்பேக்.!

By Asianet TamilFirst Published Jan 26, 2022, 10:33 AM IST
Highlights

 பிரிட்டிஷாரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நம் தேசம், 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி நள்ளிரவில், சுதந்திரம் அடைந்தது.  ஆங்கிலேயர்களால்  பூட்டப்பட்ட அடிமை சங்கிலியை அறுத்தெறிந்த தினம்தான் சுதந்திர தினம். 

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 26-ஆம் தேதி நாடு குடியரசுத் தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடுகிறது. இந்தக் குடியரசுத் தினம் என்பது என்ன? ஜனவரி 26-ஆம் தேதியைக் குடியரசுத் தினத்துக்கு எப்படி தேர்வு செய்தார்கள்? குடியரசுத் தினத்துக்கும் சுதந்திரத் தினத்துக்கும் என்ன வித்தியாசம்?

 பிரிட்டிஷாரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நம் தேசம், 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி நள்ளிரவில், சுதந்திரம் அடைந்தது.  ஆங்கிலேயர்களால்  பூட்டப்பட்ட அடிமை சங்கிலியை அறுத்தெறிந்த தினம்தான் சுதந்திர தினம். ஆங்கிலேயர்கள் நமக்கு வழங்கிய சுதந்திரம் என்பது, முழுமையானதாக இல்லாமல் இருந்தது.  நாடு சுதந்திரம் பெற்றபோதும்,  பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு டொமினியன் என்ற அந்தஸ்தைத்தான் வழங்கியது. டொமினியன் அந்தஸ்து என்பது,  பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு உட்பட்ட சுயஆட்சி. இந்தியா சுயமாக ஆட்சி நடத்தினாலும், ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்துக்குக் கீழ்தான் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. 

இதன்படி பிரிட்டிஷாரின் கவர்னர் ஜெனரல் நியமனம் தொடர்ந்தது. அந்தப் பதவிக்கு, ஆங்கிலேயர்கள் யாரைக் கைகாட்டுகிறார்களோ, அவர்தான் நாட்டின் கவர்னர் ஜெனரலாக இருக்க முடிந்தது. இந்த டொமினியன் அந்தஸ்திலிருந்து விடுபட வேண்டும் என்றால், நாடு குடியாட்சியாக மலர வேண்டியிருந்தது. அதாவது மக்களாட்சி. அதன் தொடர்ச்சியாக அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு, அந்த அரசியலமைப்புச் சட்டம் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நம் நாட்டில் நடைமுறைக்கு வந்தது. அன்று முதல் இந்தியாவில் மக்களாட்சி மலர்ந்தது. பிரிட்டிஷாரின் கவர்னர் ஜெனரல் பதவி நீக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது.

 நாடு 1950 ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு நாடாக மலர்வதற்கு அந்தத் தேதியை தேர்வு செய்ததில் இன்னொரு வரலாற்று பின்னணியும் உண்டு. நாடு சுதந்திரம் அடைய 17 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது, 1929 டிசம்பரில் லாகூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், ‘பூரண சுயராஜ்யம்தான் நாட்டின் உடனடி லட்சியம்' என்ற தீர்மானம் மகாத்மா காந்தி தலைமையில்  நிறைவேற்றப்பட்டது. அதன்படி,1930 ஜனவரி 26 அன்று சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என நாட்டு மக்களுக்குக் காந்தி  வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று நாடு முழுவதும் மக்கள் அமைதியான முறையில் சுதந்திர தினம் கொண்டாடினர்.

 நாடு சுதந்திரம் அடைந்த பிறகு  முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அமைச்சரவை குடியரசுத் தினத்தை ஏற்கனவே காந்தி விரும்பியபடி ஜனவரி 26-இல் கொண்டாடுவது என முடிவு செய்தது. அதன்படி 1950 முதல் ஜனவரி 26-இல் குடியரசுத் தினம் கொண்டாடப்படுகிறது. இப்போது நாம் குடியரசுத் தினம் கொண்டாடும் டெல்லி  ராஜ்பாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை அமைத்தவர் பிரிட்டனைச் சேர்ந்த எட்வின் லுாட்டியன்ஸ். குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து பார்க்கையில் டெல்லி நகரின் அமைப்பு தெரிய வேண்டும் என்ற நோக்குடன் வடிவமைத்தார். அந்தப் பாதையில்தான் குடியரசுத் தலைவர் மூவர்ணக் கொடியை ஏற்றி இந்திய படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

click me!