
சிங்கப்பூர் வீதிகள் போல் இந்தியாவின் தெருக்கள், ஜப்பானை போல் ஹைடெக் வாழ்க்கை முறை, அமெரிக்காவை போல் சர்வ வல்லமையான தேசம்!...இன்னும் என்னெல்லாமோ கனவுகளுடன் எதிர்பார்க்கப்பட்டது மோடியின் ஆட்சி. ஆனால் ரிசல்ட் என்னவென்பது மக்களுக்குத் தெரியும்.
இந்நிலையில் ‘அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது!’ என்று மீடியாக்கள் இப்போதே மோளம் அடிக்க துவங்கிவிட்டன. இதுவரையில் பி.ஜே.பி. எதை எதை சாதித்ததோ தெரியவில்லை! ஆனால் என்னவெல்லாமோ செய்துவிட்டோம் என்றபடி பிரச்சாரத்துக்கு வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்திருக்கிறது.
இந்நிலையில் மோடி சில மாதங்களுக்கு முன்பே திருவாய் மலர்ந்த ‘2018 ஜனவரி வழக்கமான ஜனவரியாக இருக்காது’ எனும் வார்த்தை ஒவ்வொரு இந்தியனின் வயிற்றிலும் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது.
காரணம், கடந்த 2017-ல் திடீரென பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தது போல் பொருளாதார சீர்திருத்தம் எனும் பெயரில் இந்த ஜனவரியில் ஏதாவது தடாலடி அறிவிப்பை மோடி தட்டிவிடுவாரோ? மீண்டும் நூறுக்கும், இருநூறுக்கும் ஏ.டி.எம். வாசலில் நாயாய் தவித்துக் கிடக்க வேண்டியிருக்குமோ? என்று இப்போதே பகீர் கனவில் நோக துவங்கிவிட்டான் இந்தியன்.
ஆனால் இதை மறுக்கும் பி.ஜே.பி. ஆதரவாளர்கள் சிலரோ ‘பிரதமர் இந்த முறை தரப்போவது மருந்து இல்லை, இனிப்புதான். தான் ஆட்சிக்கு வந்தால் கள்ளப்பணத்தை தோண்டியெடுத்து ஒவ்வொரு இந்தியனின் அக்கவுண்டிலும் 15 ஆயிரத்தை போட்டுவிடுவேன் என்று சொன்னாரே நினைவிருக்கிறதா! அதைத்தான் செய்யப்போகிறார். அம்மாம் பெரிய தொகையை போடாவிட்டாலும் கூட நிச்சயமாக சில லட்சங்களை போடுவார் என்பது உறுதி. அதைத்தான் 2018 ஜனவரி வழக்கமானதாக இருக்காது என சொல்லியிருக்கிறார்.” என்கிறார்கள்.
ஆனால் அரசியல் சார்ந்த பொருளாதார வல்லுநர்கள் அடிக்கோடிட்டுக் காட்டும் ஒரு விஷயம் என்னவென்றால்...”அடுத்த ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருப்பதால் வரும் பட்ஜெட்டில் பெரிதளவு சுமைகளை மக்களின் மேல் அள்ளி வைக்காது பி.ஜே.பி. நிச்சயம் மக்கள் மகிழும் வண்ணம் அல்லது மக்களுக்கு சுமையற்ற வகையில்தான் பட்ஜெட் இருக்கும். இது உறுதி.” என்கிறார்கள்.
என்னாக போகிறதோ...?