Latest Videos

ஒடிசா பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? பிரதமர் மோடிக்கு முதல்வர் நவீன் பட்நாயக் சரமாரி கேள்வி!

By Manikanda PrabuFirst Published May 12, 2024, 12:15 PM IST
Highlights

ஒடிசா பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என பிரதமர் மோடிக்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
 

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலோடு சேர்த்து சில மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த வகையில், ஒடிசா மாநிலத்தில் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளுக்கு 4,5,6,7ஆவது கட்டம் என நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.

அதேபோல், மொத்தம் 147 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கு மே 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் பிஜு ஜனதாதளம், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

தேர்தலையொட்டி அம்மாநிலத்தின் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஒடிசா மாநிலத்தில் அண்மையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, “ஒடிசாவில் 50 ஆண்டுகளாக காங்கிரஸும், 25 ஆண்டுகளாக பிஜு ஜனதாதளம் கட்சியும் ஆட்சி புரிந்து மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. ஜூன் 4ஆம் தேதி வாக்கு முடிவுகள் வரும்போது பிஜு ஜனதாதளம் அரசு காலாவதியாகி விடும். அன்று பாஜகவின் புதிய முதல்வர் அறிமுகம் செய்யப்படுவார். ஜூன் 10ஆம் தேதி, புவனேஸ்வரில் பாஜக முதல்வரின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.” என்றார்.

இந்த நிலையில், ஒடிசா பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என பிரதமர் மோடிக்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார். அம்மாநிலத்தின் 4 மக்களவைத் தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளதற்கிடையே, பிஜு ஜனதாதளம் கட்சித் தலைவரும், ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் நவீன் பட்நாயக் பேசியிருப்பதாவது, “மோடி அவர்களே ஒடிசா பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? எங்களது ஒடியா மொழி மிக நீண்ட வரலாறு கொண்ட ஓர் உயர்தனிச் செம்மொழி. ஆனால் சமஸ்கிருத வளர்ச்சிக்குக்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நீங்கள் ஒடியா மொழி வளர்ச்சிக்குக்கு ஒதுக்கிய தொகை வெறும் பூஜ்ஜியம்.

பாரம்பரியம் மிக்க ஒரிசா இசையை செம்மாந்த இசையாக அறிவியுங்கள் என்று 2 முறை கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையை  2 முறையும் நிராகரித்து விட்டீர்கள். ஒடிசா மாநிலத்தின்  சாதனை நாயகர்களை நீங்கள் அங்கீகரித்ததே இல்லை. எங்கள் மகத்தான தலைவர்  பிஜு பட்நாயக்கிற்கு  பாரத் ரத்னா விருது வழங்குவதை திட்டமிட்டே புறக்கணித்தீர்கள்.

ஒடிசா விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு 2 மடங்கு ஆதார விலை கிடைக்கும் என்றீர்கள். விவசாயிகளை ஏமாற்றி விடீர்கள். கடற்கரை சாலை அமைத்துத்தந்து ஒரிசா வளர்ச்சியை உறுதி செய்வேன் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். அதையும் மறந்து விட்டீர்கள். நிலக்கரிதான் ஒடிசாவின் இயற்கை வளம். எங்கள் செல்வத்தை அடிமாட்டு விலைக்கு அள்ளிச் செல்கிறீர்கள். அதற்கான விலையை கடந்த 10 ஆண்டுகளில் உயர்த்தவே இல்லை. 

2014 தேர்தலிலும் 2019 தேர்தலிலும் விலைவாசியைக் குறைப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்குவேன் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். கேஸ் சிலிண்டர் விலை குறைப்பேன், பெட்ரோல் விலை குறைப்பேன், டீசல் விலை குறைப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். ஜி.எஸ்.டி குறைப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாவற்றையும் மறந்து விட்டீர்கள். 

முதல்வர் பதவியை ஏன் ராஜினாமா செய்யவில்லை: அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்!

தேர்தல் வந்ததும் ஓட்டுக் கேட்டு மீண்டும் ஒரிசாவுக்கு வருகிறீர்கள். ஏற்கெனவே வாக்குறுதி கொடுத்து  நீங்கள் ஏமாற்றியதை ஒரிசா மக்கள் மறக்கவில்லை. பூரி ஜெகன்னாதர் சாட்சியாக சொல்கிறேன். ஒன்றியத்தில் இந்த முறை நீங்கள் ஆட்சி அமைக்கப்போவதில்லை. ஒடிசாவில் 6ஆவது முறையாக பிஜு ஜனதா தளம் ஆட்சி அமைக்கும்.” என நவீன் பட்நாயக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் பிஜூ ஜனதாதளம் ஆட்சியில் உள்ளது. அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் 5ஆவது முறையாக தொடர்ந்து முதல்வராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!