அபிஷேக் பானர்ஜி மனைவி துபாய் செல்ல தடை: விமான நிலையத்தில் மடக்கிய அதிகாரிகள்!

By Manikanda PrabuFirst Published Jun 5, 2023, 1:50 PM IST
Highlights

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி., அபிஷேக் பானர்ஜியின் மனைவி கொல்கத்தா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, அவரது துபாய் பயணம் மறுக்கப்பட்டுள்ளது

மேற்குவங்க நிலக்கரி ஊழல் வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், அக்கட்சியின் மக்களவை உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். துபாய் செல்வதற்காக வந்த அவரை தடுத்து நிறுத்திய குடிவரவுத் துறை அதிகாரிகள், அவரது பயணத்தை தடை செய்துள்ளனர். இதற்கு முன்பும், அவர் விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு, அவரது பயணத்துக்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நிலக்கரி ஊழல் தொடர்பாக கடந்த 2020ஆம் ஆண்டு இறுதியில் மேற்குவங்கம், பிஹார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக, மேற்குவங்க மாநிலத்தின் குனுஸ்டோரியா மற்றும் கஜோரா பகுதிகளில் உள்ள ஈஸ்டர்ன் கோல் ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிலக்கரி சுரங்கங்களில் பல கோடி ரூபாய் மதிப்பில் நிலக்கரி ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

உங்கள் தந்தை ராஜினாமா செய்தாரா? ராகுல் காந்தியை விளாசும் நெட்டிசன்கள்!

இந்த வழக்கில் தொடர்புடையதாக மேற்குவங்கத்தை சேர்ந்த அனுப் மஜ்ஹி என்கிற லாலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அத்துடன், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா பானர்ஜி ருஜிரா உள்ளிட்டவர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, ருஜிரா பானர்ஜியிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. அதனையடுத்து, அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ருஜிரா பானர்ஜியிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதி கோரி அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தை நாடி, அதற்கான அனுமதியையும் பெற்றுள்ளது.

அதன்படி, ருஜிரா பானர்ஜியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, அவரிடம் மீண்டும் விசாரணை நடத்துவதற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நிலையில், துபாய் செல்வதற்காக வந்த ருஜிரா பானர்ஜி, விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு அவரது பயணம் மறுக்கப்பட்டுள்ளது.

click me!