ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரியை விட கூட்டணி ஆட்சியே சிறந்தது என சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி. சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 109 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதியும், 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 26ஆம் தேதியும் நடந்து முடிந்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, 94 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வருகிற மே மாதம் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. அடுத்தடுத்த கட்டங்களுக்கான தேர்தலுக்கு நாடு தயாராகி வருகிறது,
undefined
மக்களவைத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று 3ஆவது முறையாக ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. 370 இடங்களில் தனித்தும், 400 இடங்களுக்கு மேல் கூட்டணியுடன் வெற்றி பெறவும் பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த இரண்டு முறை போலவே இந்த முறையும் பிரதமர் மோடியையே பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி தேசிய ஜனநாயகக் கூட்டணி களமிறங்கியுள்ளது. நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாகவும் பாஜகவினர் கூறி வருகின்றனர். மக்களும் மீண்டும் மோடி வர வேண்டும் என விரும்புவதாக பிரசாரக் கூட்டங்களில் மோடியே கூறி வருகிறார்.
அதேசமயம், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. ஆனால், எதிர்க்கட்சிகள் சார்பாக பிரதமர் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் ஒராண்டில் 2 அல்லது 4 பிரதமர்களை கூட உருவாக்குவோம் என சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி. சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு பதிலளித்த சஞ்சய் ராவத், “ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரியை விட கூட்டணி ஆட்சியே சிறந்தது. யாரை பிரதமராக தேர்வு செய்கிறோம் என்பது நமது விருப்பம். ஒரு வருடத்தில் இரண்டு அல்லது நான்கு பிரதமர்களை கூட உருவாக்குவோம், ஆனால் நம் நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி செல்ல விடமாட்டோம்.” என தெரிவித்துள்ளார்.
டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா!
“மக்களை வாக்களிக்க வேண்டும் என மஹாயுதி தலைவர்கள் மிரட்டுகிறார்கள். இந்த சம்பவம் சோலாப்பூரில் நேற்று நடந்தது. வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் பிரதமர் மோடி இருந்தால் ஏன் இப்படி செய்கிறார்கள்?” என சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பினார்.
“பாராமதியிலும், ஷிரூரிலும் துணை முதல்வர் அஜித் பவார் பகிரங்கமாக மிரட்டுகிறார். தொழிலதிபர்கள், வியாபாரிகள் போன்றவர்களை மிரட்டுகிறார்கள். நோட்டீஸ் கொடுத்து, மனைவிக்கு வேலை தருவதாக ஆசை வார்த்தை காட்டி மிரட்டுகிறார்கள், அவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்றால் 50 கோடி அபராதம் விதிக்கப்படும் என்று மிரட்டுகிறார்கள். நாட்டில் ஜனநாயகம் இருக்கும் போது இதெல்லாம் ஏன் தேவை?” எனவும் சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பினார்.