டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைவர் திடீரென ராஜினாமா செய்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரவிந்தர் சிங் லவ்லி, தனது ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சியின் டெல்லி பிரிவு எதிராக இருந்தது. இருப்பினும், ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது.” என தெரிவித்துள்ளார்.
undefined
அரவிந்தர் சிங் லவ்லி, 1998ஆம் ஆண்டு காந்தி நகர் தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி சட்டசபைக்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015ஆம் ஆண்டு வரை அந்த தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையிலான அரசாங்கங்களில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வருவாய் அமைச்சகம், கல்வி மற்றும் போக்குவரத்து போன்ற பல முக்கிய இலாகாக்களை வகித்துள்ளார்.
தொழில்நுட்பக் கோளாறு அவசரமாக டெல்லி திரும்பிய இண்டிகோ விமானம்!
2019 மக்களவைத் தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில் கிரிக்கெட் வீரரான பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீர், ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி ஆகியோருக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். அந்த தேர்தலில் கவுதம் கம்பீர் வெற்றி பெற்றார்.
கல்லூரிக் காலத்தில் மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட அரவிந்தர் சிங் லவ்லி, 1990ஆம் ஆண்டில், டெல்லி இளைஞர் காங்கிரஸின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1992 முதல் 1996ஆம் ஆண்டு வரை இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் (NSUI) பொதுச் செயலாளராகப் பணியாற்றினார்.
காங்கிரஸ் கட்சியின் நீண்ட காலமாக பணியாற்றிய அவர், 2017ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். ஆனால், சில மாதங்களிலேயே பாஜகவின் சித்தாந்தங்கள் தவறானவை என்று கூறி மீண்டும் காங்கிரஸில் ஐக்கியமானார். இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.