
காலம், காலமாக பாதுகாப்புக்காகவும், பிரிவினையை உண்டாக்கவே சுவர்கள் எழுப்பபட்டு வந்துள்ளன. ஆனால், முதல்முறையாக ஆதரவற்றவர்களும், ஏழைகளுக்கும் உதவும் கருணைச் சுவர் உருவாக்கப்பட்டுள்ளது.
‘வால் ஆப் கைண்ட்நெஸ்’
ஐதராபாத் மாநகராட்சியுடன் கைகோர்த்து, ராஜேந்திரா நகரில் கருணையின், அன்பின் சுவர் எனச் சொல்லப்படும் ‘வால் ஆப் கைண்ட்நெஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது.
உதவாத பொருட்கள்
அதாவது, நம்மால் பயன்படுத்த முடியாத பொருட்கள், ஆடைகள், செருப்பு, போர்வை, பாய் உள்ளிட்ட தேவையில்லாத பொருட்களை வீசி எறிந்துவிடாமல், இந்த சுவர் அருகே கொண்டு வந்து வைத்து விடவேண்டும். இந்த பொருட்கள் யாருக்கு தேவையோ, அதாவது, ஏழைமக்கள், ஆதரவற்றோர் என யாருக்கு தேவையோ அவர்கள் யார் வேண்டுமானாலும் அனுமதியில்லாமல் எடுத்துச்செல்லலாம். ஆடைகள், பொருட்கள் மட்டும் வைக்க வேண்டியது இல்லை, உணவுகளும் இங்கே வைத்தால்கூட, அதை தேவைப்படுவோர் எடுத்துக்கொள்வார்கள்.
ஈரான் பிறப்பிடம்
ஆதரவற்றவர்களுக்கு முகம் தெரியாமல் உதவும் இந்த சுவர் திட்டம் முதன் முதலில் ஈரான் நாட்டில் தொடங்கப்பட்டது. அதன்பின் படிப்படியாக கேரளாவுக்கு பரவி, தற்போது ஐதராபாத்தில் மனிதநேயத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.
பல் மருத்துவர்
இந்த திட்டத்துக்கு ஐதராபாத் மாநாகராட்சியும் ஆதரவு அளித்தபோதிலும், இதை தொடங்கியவர் தெலங்கானாவைச் சேர்ந்த இளம் பல் மருத்துவர் ஷ்ரவானி சீனு நாயக்.
கேரளாவில் உதவும் உள்ளங்கள்
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சிலர், தங்களை அடையாளப்படுத்தாமல் இலவச உணவு கூப்பன்களை விநியோகித்து வருகின்றனர். குறிப்பிட்ட சில இடங்களைத் தேர்வு செய்து அங்கு கூப்பன்கள் கிடைக்குமாறு செய்துள்ளனர். பசியால் வாடுபவர் எந்த தயக்கமும் இன்றி குறிப்பிட அந்த இடங்களுக்குச் சென்று உணவு கூப்பனை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.
அதேபோலவே, ஐதரபாத்தில் ராஜேந்திர நகர், தெலங்கானாவின் நிஜாமாபாத்தில்இந்த அன்பின் சுவர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உதவும் உள்ளங்கள் தங்களைஅடையாளப்படுத்தாமல் தங்களிடம் உள்ள தேவையற்ற பொருட்களை பிறர் பயன்பாட்டுக்கு பலரும் அளிக்கிறார்கள்.
சிறுமியின் தொடக்கம்
முதன்முதலில் கடந்த ஜூன் 4-ம் தேதி, ஒரு சிறுமி தனது புத்தகப் பையை விட்டுச் சென்றார். அடுத்தடுத்த நாட்களில் அங்கு உடைகள், காலணிகள், புத்தகங்கள் இன்னும் பல வகையானப் பொருட்கள் வைக்கப்பட்டன. அங்கே வைக்கப்படும் பொருட்களை தேவைப்படும் ஏழை எளியோர் மகிழ்ச்சியுடன் எடுத்துச் செல்கின்றனர்.
இது குறித்து ஜதராபாத் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “ மக்கள் தங்களுக்கு தேவையில்லை என நினைக்கும் பொருட்கள், அணிய முடியாத ஆடைகள், செருப்புகள் என அனைத்தையும் வீசி எறியாமல் இந்த சுவர் அருகே வைத்தால், தேவைப்படும் நபர்கள் மற்றவர்களின் கெஞ்சிக்கொண்டு இருக்காமல் இதை எடுத்துச் செல்வார்கள்’’ எனத் தெரிவித்தார்.