அனைவரையும் பார்த்திருப்பீர்கள், சிறந்தவர்களுக்கு வாக்களியுங்கள் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தியுள்ளார்
ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியின் இறுதியில் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவன நாளும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஆர்எஸ்எஸ் தனது வருடாந்திர விஜயதசமி மற்றும் நிறுவன நாளை கொண்டாடுகிறது. அந்த வகையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது 98ஆவது நிறுவன நாள், விஜயதசமி விழாவை மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கொண்டாடியது, பாடகர் சங்கர் மகாதேவ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், தேர்தல்கள் நெருங்கிவிட்டதால் சமூகத்தில் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் சீர்குலைக்கும் சக்திகளை கண்டு மக்கள் மயங்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை, அதை ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
undefined
“வாக்குகளைப் பெறுவதற்காக நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சிகள் நடக்கும். இதுபோன்ற முயற்சிகள் நடந்தாலும், வாக்காளர்கள் தங்களுக்கு முன் இருக்கும் சிறந்த விருப்பத்தை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். நாட்டின் மக்கள் அனைவரையும் பார்த்திருக்கிறார்கள். இப்போது அதிலிருந்து சிறந்த தேர்வை அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.” என மோகன் பாகவத் வலியுறுத்தியுள்ளார்.
“நாடு மக்களவைத் தேர்தலை 2024ஆம் ஆண்டில் சந்திக்க போகிறது. உணர்ச்சிகளைத் தூண்டி வாக்குகளை அறுவடை செய்யும் முயற்சிகள் விரும்பத்தக்கவை அல்ல, ஆனால் அவை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. சமுதாய ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும் இவைகளை தவிர்ப்போம். ஓட்டு போடுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை. ஒற்றுமை, ஒருமைப்பாடு, அடையாளம் மற்றும் நாட்டின் வளர்ச்சியின் முக்கியப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.” என்று மோகன் பாகவத் கேட்டுக் கொண்டார்.
தீவிர புயலாக வலுவடைந்த ஹமூன்: ஒடிசாவுக்கு பெரிய பாதிப்பு இல்லை - வானிலை ஆய்வு மையம்!
பாபாசாகேப் அம்பேத்கரை தனது உரையில் இருமுறை குறிப்பிட்டு அவரை மோகன் பாகவத் புகழ்ந்து பேசினார். நாட்டில் பிளவுகளை போக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், அரசியல் நிர்ணய சபையில் உரையாற்றும் போது அம்பேத்கர் ஆற்றிய இரண்டு உரைகள் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார்
தங்களை கலாச்சார மார்க்சிஸ்டுகள் என்று அழைக்கும் சில அழிவு சக்திகள் உள்ளன என்று மோகன் பகவத் கூறினார். ஆனால் அவர்கள் 1920களுக்கு பிறகு, கார்ல் மார்க்ஸை மறந்துவிட்டார்கள் என்றும் அவர் விமர்சித்தார். “அனைத்து வகையான ஒழுங்குமுறை மற்றும் ஒழுக்க நெறிகளை எதிர்க்கின்றனர். எதோ ஒரு சித்தாந்தம் என்ற போர்வையில் அவர்கள் செயல்படுகிறார்கள். ஸ்வயம்சேவகராக இருந்தாலும் சரி, கம்யூனிஸ்ட்டாக இருந்தாலும் சரி, அவர்கள் செய்யும் நல்ல வேலையை அவர்கள் சீர்குலைப்பார்கள்.” என்றும் அவர்கள் மீது பாகவத் குற்றம் சாட்டினார்.
முன்னதாக, கடந்த வாரம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் சிபிஐ பொதுச் செயலாளர் ஏபி பர்தனின் மார்பளவு சிலைக்கு மோகன் பகவத் மாலை அணிவித்து மரியாதை செய்தார் என்பது கவனிக்கத்தக்கது. மணிப்பூர் வன்முறை போன்ற பிரச்சினைகளையும் மோகன் பாகவத் பேசினார். அப்பிரச்சினை சில தனிப்பட்ட நலன்களுக்காக தூண்டப்பட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.