ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்த அடுத்த நிமிடமே கேபினெட் பொறுப்பு-யார் இந்த வி.கே. பாண்டியன்.? புதிய தகவல்

By Ajmal Khan  |  First Published Oct 24, 2023, 2:54 PM IST

ஒடிசா முதல்வரின் தனிச் செயலாளர் பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற தமிழகத்தைச்சேர்ந்த வி.கே. பாண்டியன், தற்போது அம்மாநில கேபினெட் அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.


ஒடிசா மாநிலத்தில் முதல்-மந்திரியாக நவீன் பட்நாயக் பதவி வகித்து வருகிறார். நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான ஐ.ஏ.எஸ். அதிகாரி கார்த்திகேய பாண்டியன் செயல்பட்டு வந்தார்.  இவர் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், 2000-ம் ஆண்டு பேட்ச் ஒடிசா கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்ச்சி பெற்றவர். 2002-ம் ஆண்டு முதல் ஒடிசாவில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக பணியாற்றி வந்தார். 

Tap to resize

Latest Videos

இந்தநிலையில் விகே பாண்டியன் 10 வருடங்களாக, ஒடிசா அரசியலில் அதிகார மையமாக மாறினார். ஒடிசா முதல்வருக்கு மிக நெருக்கமான அதிகாரியாக இருந்த அவர், ஒடிசா முதல்வர் பங்கேற்கும் அனைத்து முக்கிய கூட்டங்களிலும் கலந்து கொண்டுவந்தார். விகே பாண்டியன் முதல்வர் நவின் பட்நாயக்கின் அரசியல் வாரிசு என்று அம்மாநிலத்தை சேர்ந்த எதிர்கட்சிகளும், நெட்டிசன்களும் அழைத்து வந்தனர். இந்தநிலையில் விகே பாண்டியன் ஐஏஎஸ் விருப்ப ஓய்வு கேட்டு மத்திய அரசுக்கு விண்ணப்பித்து இருந்தார். இதற்கு மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்திருக்கிறது. இதனையடுத்து அரசியலில் வி.கே.பாண்டியன் இறங்குவார் என தகவல் பரவியது. மேலும் விரைவில் வரவுள்ள தேர்தலிலும் போட்டியிட இருப்பதால் தான் பதவியையை ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது. 

இந்த சூழ்நிலையில் ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் சுரேந்திர குமார் வெளியிட்டுள்ள அரசு உத்தரவில், மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி திட்டம் மற்றும் நபின் ஒடிசாவின் தலைவராக வி.கே. பாண்டியன் நியமிக்கப்படுகிறார். இந்த பதவி, கேபினெட் அமைச்சருக்கு இணையான பதவி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  வி.கே. பாண்டியன் முதல்வருக்குக் கீழ் நேரடியாக பணியாற்றுவார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!