
கடனில் சிக்கித் தவிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா (Vi), போதுமான நிதி உதவி கிடைக்கவில்லை என்றால் 2025-26 நிதியாண்டுக்கு பிறகு தனது செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது.
AGR நிலுவைத் தொகையை செலுத்த முடியாததால் வங்கிகள் புதிய கடன்களை வழங்க தயங்குவதாக Vi தெரிவித்துள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் Vi மனு தாக்கல் செய்துள்ளது. வங்கிக் கடன்கள் கிடைக்காத பட்சத்தில், நிறுவனத்தின் செயல்பாடுகள் மேம்படாமல் ஸ்தம்பித்துவிடும் என்றும், மூலதனச் செலவுகள் முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் Vi தெரிவித்துள்ளது.
கடந்த 12 மாதங்களில் திரட்டப்பட்ட நிதி மற்றும் இதுவரை செய்த முதலீடுகள் அனைத்தும் மதிப்பற்றதாகிவிடும் என்றும், அரசின் 49 சதவீத பங்குகளும் மதிப்பை இழக்கும் என்றும் அந்த நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
அரசு உதவி செய்யாமல் AGR நிலுவைத் தொகையை செலுத்த முடியாவிட்டால், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT) திவால் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று Vi தெரிவித்துள்ளது. அவ்வாறு நேர்ந்தால், நிறுவனத்தின் நெட்வொர்க் மற்றும் அலைக்கற்றை சொத்துக்கள் மதிப்பை இழக்கும் என்றும், சேவை சிறிது நேரம் தடைபட்டாலும் அது வாடிக்கையாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் Vi எச்சரித்துள்ளது.
சுமார் 20 கோடி வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டு, வேறு சேவைக்கு மாற வேண்டியிருக்கும் என்றும், சுமார் 30,000 ஊழியர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகும் என்றும் Vi சுட்டிக்காட்டியுள்ளது. சரியான நேரத்தில் அரசு உதவி கிடைத்தால், 20 கோடி வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற சேவை கிடைப்பதுடன், பல லட்சம் பங்குதாரர்களும் பயனடைவார்கள் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Vi நிறுவனத்தில் அரசுதான் மிகப்பெரிய பங்குதாரர் (49%). எனவே, உடனடி அரசு உதவி கிடைக்காவிட்டால், Vi நிறுவனம் செயல்பட முடியாமல் போனால் அரசுக்குத்தான் அதிக இழப்பு ஏற்படும் என்று Vi தெரிவித்துள்ளது. தொலைத்தொடர்பு சந்தை இரு நிறுவனங்களின் ஆதிக்கமாக சுருங்கினால், அது துறையில் போட்டித்தன்மை,, நுகர்வோருக்கான வாய்ப்புகள் மற்றும் எதிர்கால அலைக்கற்றை ஏலங்களுக்கும் பாதகமாக அமையும் என்று Vi எச்சரித்துள்ளது.
2021 சீர்திருத்தத் திட்டம் மற்றும் சமீபத்தில் நிலுவைத் தொகையை பங்காக மாற்றியதற்கு அரசுக்கு நன்றி தெரிவித்த Vi, AGR தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நிறுவனத்தின் வணிகம் மற்றும் நிதி நிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
2020ல் செலுத்தப்பட்ட தொகை மற்றும் 2023ல் நிலுவைத் தொகையை பங்காக மாற்றிய பிறகு, 2025 மார்ச் நிலவரப்படி ரூ.7,852 கோடி AGR நிலுவைத் தொகை உள்ளது. இதனை 20 ஆண்டுகளில் செலுத்தலாம் என்றும், முதல் 4 ஆண்டுகளுக்கு தவணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு வட்டி வசூலிக்கப்படாது என்றும், அதன் பிறகு 11 சம தவணைகளில் ஆண்டுக்கு ரூ.714 கோடி செலுத்தலாம் என்றும் Vi முன்மொழிந்துள்ளது.
மேலும், 2021க்கு முன் வாங்கிய அலைக்கற்றைக்கான கட்டணத்தை ஒரு வருடம் தள்ளிவைக்க வேண்டும் என்றும், 2028 முதல் 2032 வரை அலைக்கற்றை தவணைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் Vi கோரிக்கை வைத்துள்ளது.