
வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது இந்தியா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களுக்கு சில இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கதேசத்திலிருந்து ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்ய கொல்கத்தா மற்றும் நஹவா ஷேவா துறைமுகங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பழங்கள், கார்பனேற்றப்பட்ட பானங்கள், மரச்சாமான்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், நூல் போன்ற பொருட்கள் அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் மாநிலங்களின் எந்த நிலையான சோதனைச் சாவடிகள் அல்லது ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் மற்றும் மேற்கு வங்காளத்தின் ஃபுல்பாரி மற்றும் சாங்க்ராபாந்தா நிலையான சோதனைச் சாவடிகள் வழியாகவும் இறக்குமதி செய்யப்படக்கூடாது.
இந்தக் கட்டுப்பாடுகள் வங்கதேசப் ஏற்றுமதிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். வங்கதேசத்திலிருந்து ஆண்டுதோறும் ரூ.6,000 கோடி மதிப்புள்ள ஆயத்த ஆடைகள் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் 93% நில வழித்தடங்கள் வழியாகவே இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த புதிய கட்டுப்பாடுகளால் வங்கதேசத்திற்கு பெரும் இழப்பு ஏற்படும். இருப்பினும், நேபாளம் மற்றும் பூட்டான் நாடுகளுக்கு வங்கதேசத்திலிருந்து பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது.