சீதா, அக்பர் என்ற பெயர் கொண்ட சிங்கங்களை ஒரே இடத்தில் அடைக்க விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி உயிரியல் பூங்காவில், சீதா, அக்பர் என்ற பெயர்களைக் கொண்ட சிங்கங்கள் அடைக்கப்பட்டிருப்பதால், மாநில வனத்துறைக்கு எதிராக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு பிப்ரவரி 12ஆம் தேதி 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. அதில், 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும், 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சீதா, அக்பர் என்ற பெயர்களைக் கொண்ட சிங்கங்களை ஒரே இடத்தில் அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில், “அக்பர் என்பவர் புகழ்பெற்ற முகலாய பேரரசர்களில் ஒருவர். சீதா என்பவர் ராமாயணத்தின் கதாபாத்திரம். இந்து மத வழக்கங்களில் சீதை தெய்வமாக வழிபடப்படுகிறார். எனவே, இது இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது.” என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், சிங்கங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வருகிற 20ஆம் தேதி வரவுள்ளது.
ரேபரேலி தொகுதி காந்தி குடும்பத்துக்குத்தான்: ஜெய்ராம் ரமேஷ்!
இதனிடையே, இரண்டு சிங்கங்களுக்கும் தாங்கள் பெயரிடவில்லை என்றும், அதிகாரப்பூர்வமாக பெயரிடுவதற்கு காத்திருப்பதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திரிபுராவில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து இரண்டு சிங்கங்கள் மாற்றப்பட்டதாகவும், சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு வந்தவுடன் பெயர் மாற்றப்படவில்லை என்று வனத்துறை தெரிவித்துள்ளது.