மாநிலங்களவைத் தேர்தலில் தனக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதால் அவர் அதிருப்தி அடைந்திருக்கிறார் எனவும் இதனை அறிந்த திக்விஜய சிங் உள்ளிட்ட மூத்த தலைரவ்கள் அவரை கட்சியை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் தெரிகிறது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான கமல்நாத் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்குத் தாவப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல்நாத் காங்கிரஸ் கட்சி குறித்து அதிருப்தியில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்தில் முன்னாள் முதல்வர் அசோக் சவான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றொரு முன்னாள் முதல்வர் பாஜகவில் இணைய இருக்கும் செய்தி அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சனிக்கிழமை டெல்லி சென்றுள்ளது இந்த ஊகங்களுக்கு வலு சேர்க்கிறது. ஆனால் அவர் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கவில்லை. வி.டி.சர்மா போன்ற பாஜக மாநில தலைவர்கள் கமல்நாத் சேருவதை வரவேற்பதாகக் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ம.பி.யில் சிந்த்வாரா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு ஒன்பது முறை வெற்றி பெற்றுள்ள கமல்நாத், மாநிலத்தில் சிறந்த வளர்ச்சியை உறுதி செய்வதற்காக பாஜகவில் சேர வேண்டும் என்று விரும்புவதாகவும், இந்த விஷயம் அவரது பரிசீலனையில் இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
50 ஆண்டுகளுக்கு முன் சேர்ந்தபோது இருந்த காங்கிரஸ் கட்சி இப்போது இல்லை என்று அவர் உணர்கிறார் எனவும் அவரது அதிருப்தியை தலைமைக்கு தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
"ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் பிஸியாக இருப்பதாகவும், கட்சியை இப்போது மூத்த தலைவர்களான ஜெய்ராம் ரமேஷ், கே. சி. வேணுகோபால் மற்றும் ரந்தீப் சுர்ஜேவாலா போன்றவர்கள் நடத்துவதாகவும் அவர் உணர்கிறார்" என்று விஷயம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
இப்போது சிந்த்வாரா தொகுதியில் கமல்நாத்தின் மகன் நகுல் நாத் எம்.பி.யாக இருக்கிறார். அவரும் தனது தந்தையுடன் பாஜகவில் சேருவார் என்று ஊகிக்கப்படுகிறது. நகுல் நாத் நேற்று தனது ட்விட்டர் பயோவிலிருந்து 'காங்கிரஸ்' பெயரை நீக்கியதும் கட்சி மாறுவது குறித்த சலசலப்புக்கு வழிவகுத்தது.
பாஜக இரண்டு நாள் தேசிய கவுன்சில் மாநாடு நடக்கும் நேரத்தில், கமல்நாத் டெல்லி பயணம் மேற்கொண்டிருப்பதும் அவர் பாஜகவில் இணைவதற்கான சாத்தியத்தை அதிகப்படுத்துவதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அவர் இன்னும் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்யவில்லை.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1979 இல் கமல்நாத்துக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தபோது அவரை தனது "மூன்றாவது மகன்" என்று அழைத்தார்.
2019 பொதுத்தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இதன் எதிரொலியாக ம.பி.யில் இளம் காங்கிரஸ் தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா 2020இல் பாஜகவுக்கு மாறி, இப்போது மத்திய அமைச்சராக உள்ளார்.
எலக்ட்ரிக் கார் விலை இவ்ளோ குறைஞ்சிருச்சா! புதுசா கார் வாங்குறவங்களுக்கு நிறைய ஆப்ஷன் இருக்கு!