ரேபரேலி தொகுதி காந்தி குடும்பத்துக்குத்தான் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்
நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள 56 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இந்த இடங்களை நிரப்புவதற்காக வருகிற 27 ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையும் அதே நாளில் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
ராஜ்யசபா தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மனுத்தாக்கல் செய்துள்ளார். இவர் தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவை தொகுதி எம்.பியாக இருக்கிறார். இது காங்கிரஸ் கட்சியின் குறிப்பாக, காந்தி குடும்பத்தின் பாரம்பரியமிக்க தொகுதி. எனவே, எதிர்வரும் மக்களவை தேர்தலில் இந்த தொகுதியில் யார் போட்டியிடுவர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரேபரேலி தொகுதியில் காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியினர் பலர் வலியுறுத்தி வருகின்றனர். அதேசமயம், மக்களவை தேர்தலில் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரேபரேலி தொகுதி காந்தி குடும்பத்துக்குத்தான் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார் என்ற ஊகங்களுக்கு வலுசேர்க்கும் வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அந்த தொகுதி காந்தி குடும்பத்துக்குத்தான் என்று கூறியுள்ளார். ரேபரேலி தொகுதிக்கும், காந்தி குடும்பத்துக்கும் இடையே பிரிக்க முடியாத பந்தம் உள்ளது என்ற அவர், அந்த தொகுதியில் யாரை நிறுத்துவது என்பதை கட்சி முடிவு செய்யும்.
முன்னதாக, உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், “ரேபரேலி தொகுதியுடனான நெருங்கிய உறவு மிகவும் பழமையானது. உடல்நிலை மற்றும் வயது மூப்பு காரணமாக வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடியவில்லை.” என மிகவும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
ரேபரேலி தொகுதியில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 20 ஆண்டுகள் தொடர்ச்சியாக எம்.பியாக பதவி வகித்துள்ளார் சோனியா காந்தி. அதற்கு முன்பு 12 முறை காங்கிரஸ் எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்று 3 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். நாடு சுதந்திரமடைந்த பின்னர் நடந்த முதல் மக்களவைத் தேர்தலில் இந்திரா காந்தியின் கணவர் ஃபெரோஸ் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.