மணிப்பூரில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்: இவிஎம் இயந்திரங்களுக்கு தீ வைப்பு!

By Manikanda Prabu  |  First Published Apr 19, 2024, 7:09 PM IST

மணிப்பூரில் வாக்குச்சாவடியை வன்முறை கும்பல் ஒன்று சூறையாடி, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி, மொத்தம் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அனைத்து பகுதிகளிலும் காலை முதலே பொதுமக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.

தேர்தலை அமைதியான முறையில் நடத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், மணிப்பூரில் வாக்குச்சாவடியை வன்முறை கும்பல் ஒன்று சூறையாடி, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. ஆயுதம் ஏந்தியவர்கள் வாக்காளர்களை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று மிரட்டியதாக புகார்கள் எழுந்துள்ளன.

மணிப்பூர் மாநிலத்தின் மொய்ராங்காம்பு சஜேப் எனும் பகுதியில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல், வாக்குப்பதிவு எந்திரங்களுக்கும் தீ வைத்தது. மற்றொரு பகுதியில் துப்பாக்கியுடன் வன்முறைக் கும்பல் ஓடுவதும், அதை போலீசார் அமைதியாக வேடிக்கை பார்க்கும் வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆங்காங்கே துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

நிறைவடைந்தது முதற்கட்ட வாக்குப்பதிவு: தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20 சதவீதம் வாக்குப்பதிவு!

இம்பால் மேற்கில் உள்ள கைடெமில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று அவர்களுக்கு சார்பாக வாக்களித்த புகாரில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கும்பல் ஒன்று உடைத்துள்ளது. அந்த தொகுதி, காங்கிரஸ் வேட்பாளர் பிமோல் அகோஜம் வாக்குச் சாவடிக்கு விரைந்து வந்து பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் வாக்குச் சாவடி முகவர்களுடன் இதுகுறித்து பேசியதையடுத்து பிரச்சினை தீர்க்கப்பட்டதாக தெரிகிறது.

இதேபோல், அம்மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அம்மாநிலத்தின் 2 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் மாலை 5 மணி வரை 67.66 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

click me!