கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
அடுத்த 3 நாட்களுக்கு கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடலோரப் பகுதிகளைத் தவிர, பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“கடலோர மாவட்டங்கள் தவிர்த்து வட உள் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பெலகாவி, பாகல்கோட், தார்வாட், கடக், கலபுர்கி, கொப்பல், ராய்ச்சூர், விஜயபுரா, யாத்கிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். அதேபோல், பெல்லாரி, பெங்களூரு, சாமராஜநகர், சிக்கமகளூரு, சித்ரதுர்கா, தாவங்கரே, ஹாசன், குடகு, மாண்டியா, மைசூர், ராமநகரா மற்றும் தும்கூர் போன்ற தென் உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஹாசன், விஜயநகர், தும்கூர், ஷிமோகா, ராமநகரா, மைசூர், மாண்டியா, கோலார், குடகு போன்ற மாவட்டங்களில் வருகிற 19ஆம் தேதி வரை கனமழை பெய்யும். அதே நாளில், தட்சிண கன்னடா, பெலகாவி, தார்வாட், கடக், ஹாவேரி, விஜயப்பூர், பெல்லாரி, சித்ரதுர்கா மற்றும் தாவங்கேரே ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக மொபைல் நெட்வொர்க்கை பெற்ற ஹிமாச்சல பிரதேச கிராமம்.. மக்களிடம் பேசிய பிரதமர் மோடி..
ஏப்ரல் 20 ஆம் தேதி வரை வானிலை முன்னறிவிப்பு நீட்டிக்கப்படுவதால், சாமராஜநகர், சிக்கபள்ளாப்பூர், சித்ரதுர்கா, தாவங்கரே, விஜயநகர், தும்கூர், ஷிமோகா, மைசூர், மாண்டியா, கோலார் மற்றும் ஹாசன் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பில்லை என தெரிகிறது.
கனமழையில் இருந்து தற்காத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் மக்களும் அதிகாரிகளும் விழிப்புடன் இருக்குமாறும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.