அயோத்தி ராமர் கோயிலுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்திய அன்சாரி குடும்பம் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொண்டதை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்
உச்ச நீதிமன்ற திர்ப்பின் அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில் கருங்கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து வயதுடைய குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள பல்வேறு தரப்பினருக்கும் ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டன. அதனையேற்று ஏராளமானோர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். ஆனால், ராமர் கோயில் திறப்பு விழாவை பாஜகவினர் அரசியலாக்குவதாக குற்றம் சாட்டி, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விழாவில் கலந்து கொள்ளவில்லை.
அயோத்தில் ராமர் கோயில் கட்டுவது பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானது என்பதால், அது அக்கட்சிக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது. மக்களவைத் தேர்தல் 2024இல் அதனை தேர்தல் பிரசாரமாக பாஜகவினர் கையில் எடுத்துள்ளனர். பிரதமர் மோடி தான் பிரசாரம் செய்யும் இடங்களில் ராமர் கோயில் திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததை சுட்டிக்காட்டி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
கர்நாடகாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்!
அந்த வகையில், பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ராமர் கோயில் திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததை விமர்சித்ததுடன், அயோத்தி ராமர் கோயிலுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்திய அன்சாரி குடும்பம் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொண்டதை பாராட்டினார்.
இதுகுறித்துய் அவர் கூறுகையில், “அயோத்தில் வசிக்கும் அன்சாரி குடும்பத்தினர் ராமர் கோவிலுக்கு எதிராக இரண்டு தலைமுறைகளாக சட்டப்போராட்டம் நடத்தியவர்கள். ஆனால் நீதிமன்றம் ராமர் கோயிலுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியபோது, இந்த மக்கள் அதை ஏற்றுக்கொண்டனர். ராம் மந்திர் தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அனைவருக்கும் அழைப்பு அனுப்பியபோது, அன்சாரி குடும்பமும் அழைக்கப்பட்டனர். காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர்களைத் தவிர, அன்சாரி குடும்பத்தினர் உட்பட பலரும் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.” என்றார்.
அன்சாரி குடும்பத்தினர் 2 தலைமுறைகளாக இந்துக்களை எதிர்க்கின்றனர். அயோத்தியில் பாபர் மசூதிக்கான சட்டப் போராட்டம் நடந்தது. ஆனால் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு அன்சாரி அழைக்கப்பட்டார் - பிரதமர் மோடி pic.twitter.com/cRwbmgm4lg
— Asianetnews Tamil (@AsianetNewsTM)
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு சன்னி வக்பு வாரியம், நிர்மோயி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினர் உரிமை கொண்டாடி வந்தன. இதுதொடர்பான வழக்கில் மூன்று தரப்பினரும் நிலத்தை சமமாக பங்கிட்டு கொள்ள, கடந்த 2010ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 வழக்குகள் தொடரப்பட்டன. இதற்கு தீர்வு காணும் வகையில் 3 பேர் கொண்ட சமரசக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. அதிலும் தீர்வு காணப்படாததால், நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அறக்கட்டளை தொடங்கி அதன் கீழ் ராமர் கோயில் கட்டலாம் எனவும், அயோத்தியில் வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை இஸ்லமிய தரப்புக்கு ஒதுக்க மத்திய அரசும், உத்தரப்பிரதேச மாநில அரசும் ஒதுக்கி தர வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.
அயோத்தி வழக்கில் முக்கிய மனுதாரராக இருந்தவர் ஹாசீம் அன்சாரி. உடல்நலக்குறைவால் தனது 95ஆவது வயதில் அவர் காலமானார். இதையடுத்து, அவரது மகன் இக்பால் அன்சாரி வழக்கை தொடர்ந்து நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.