சில தினங்களுக்கு முன் ஹவுராவில் ராம நவமியை முன்னிட்டு பாஜக நடந்திய ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டது. அதேபோன்ற சம்பவம் ஞாயிற்றுக்கிழமை ஹூக்ளி பேரணியிலும் நடத்திருக்கிறது.
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் இன்று ராம நவமியை முன்னிட்டு பாஜக சார்பில் ஊர்வலம் சென்றபோது வன்முறை வெடித்தது. பாஜக தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ் இன்று ராம நவமி ஷோபா யாத்திரையில் பங்கேற்றிருக்கும் நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
ஊர்வலத்தின்போது கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றதையும் அதிலிருந்து பாதுகாப்பாகத் தப்பித்துச் செல்ல மக்கள் நாலாபுறமும் ஓடுவதை சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களில் காணமுடிகிறது. மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் இன்று நடந்த வன்முறையின் பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் இருப்பதாக குற்றம் சாட்டுகிறார்.
"ஹூக்லியில் பாஜகவின் ஷோபா யாத்திரையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காரணம் எளிமையானது மற்றும் தெளிவானது. மம்தா பானர்ஜி இந்துக்களை வெறுக்கிறார்" என சுகந்தா மஜும்தார் ட்வீட் செய்துள்ளார்.
இந்த வார தொடக்கத்திலும், ஹூக்ளியில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள ஹவுராவிலும் ராம நவமி ஊர்வலத்தின்போது இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. அங்கு தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அமைதி நிலவுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. வன்முறைக்குப் பின் இன்று காலை முதல் போக்குவரத்து சீரடைந்து கடைகள், சந்தைகள் திறக்கப்பட்டன.
சென்ற வியாழக்கிழமை ஹவுரா நகரில் உள்ள காசிபாரா வழியாக ராம நவமி ஊர்வலம் சென்றபோது இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறைக்குப் பின்னணியில் பாஜக மற்றும் பிற வலதுசாரிக் குழுக்கள் இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டை மறுத்த பாஜக, இந்த விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியது.
ஆளுநர் சி. வி. ஆனந்த போஸ் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி இருவரும் இந்த விவகாரம் குறித்து விவாதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.