பிரதமர் மோடிக்கு எதிராக களமிறங்கும் பிரியங்கா காந்தி?

By Manikanda Prabu  |  First Published Aug 27, 2023, 6:54 PM IST

வாரணாசியில் பிரியங்கா காந்தியை வேட்பாளராக நிறுத்த உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸார் விருப்பம் தெரிவித்துள்ளதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தெரிவித்துள்ளார்


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதேசமயம், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. அக்கூட்டணிக்கு இண்டியா என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாரணாசியில் பிரியங்கா காந்தியை வேட்பாளராக நிறுத்த உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி விரும்புவதாகவும், இது தொடர்பான பரிந்துரையை உயர்மட்டத் தலைமைக்கு விரைவில் அனுப்ப உள்ளதாகவும் அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜய் ராய் தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதி பிரதமர் மோடியின் தொகுதியாகும். கடந்த இரண்டு தேர்தல்களில் பிரதமர் மோடி அங்கிருந்தே மக்களவைக்கு தேர்வானார். 2024 தேர்தலிலும் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலேயே போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ள நிலையில், அந்த தொகுதியில் பிரியங்கா காந்தியை நிறுத்தும் விருப்பத்தை கட்சி மேலிடத்திடம் பரிந்துரைக்க உள்ளதாக அஜய் ராய் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவராக சமீபத்தில் அஜய் ராய் நியமிக்கப்பட்டார். இவர், 2014, 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் களம் கண்டு தோல்வியை தழுவியவர். அதற்கு முன்பு, 2009ஆம் ஆண்டில் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியை எதிர்த்து களம்  கண்டு தோல்வியடைந்தவர் என்பது கவனிக்கத்தக்கது.

“பிரியங்கா காந்தி எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடலாம், எங்கள் முழு பலத்துடன் அவரை தேர்தலில் வெற்றி பெறச் செய்வோம், ஆனால் அவர் வாரணாசியில் போட்டியிட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.” என்று அஜய் ராய் தெரிவித்துள்ளார். 

பிரியங்கா காந்தியை மோடிக்கு எதிராக நிறுத்த விரும்புவதால் காங்கிரஸ் என்ன செய்தியை செல்ல விரும்புகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், மோடிக்கு எதிராக வலிமையான ஒருவர் இருக்கிறார் என்பதுதான் நாங்கள் சொல்ல முயற்சிக்கும் ஒரே செய்தி என்று தெரிவித்துள்ளார்.

‘சிவசக்தி முனை’: பெயரில் சர்ச்சைக்கு இடமில்லை - இஸ்ரோ தலைவர்!

வாரணாசி மக்களவைத் தொகுதி 1991 முதல் பாஜக கோட்டையாக இருந்து வருகிறது, 2004ஆம் ஆண்டில் ஒரு முறை மட்டுமே காங்கிரஸ் அத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. 1991, 1996, 1998 மற்றும் 1999 மக்களவைத் தேர்தல்களிலும், இடைத்தேர்தல்களிலும் அந்த தொகுதியில் பாஜகவே வெற்றி பெற்றுள்ளது. 2004 ஆம் ஆண்டு மட்டும் இத்தொகுதியில் இருந்து காங்கிரஸின் ராஜேஷ் குமார் மிஸ்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 2009 ஆம் ஆண்டில் வாரணாசி தொகுதி மீண்டும் பாஜக வசம் சென்றது.

அம்மாநிலத்தின் அமேதி தொகுதியில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பேசிய அஜய் ராய், “இந்த தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்று அமேதி மக்கள் கோருகிறார்கள். பாஜக எம்பி ஸ்மிருதி இரானியின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் மற்றும் செயல்பாடுகளால் பொதுமக்கள் கோபமடைந்துள்ளனர். இப்போது மீண்டும் ராகுல் காந்தி வேண்டும் என அந்த தொகுதி மக்கள் விரும்புகிறார்கள்.” என தெரிவித்தார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2019 பொதுத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால், அமேதியில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் அவர் தோல்வியடைந்தார்.

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது. கடைசியாக, 1985ஆம் ஆண்டில் அக்கட்சி அம்மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது. 543 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு 80 எம்.பி.க்களை அனுப்பும் அரசியல் ரீதியாக முக்கியமான மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு எம்.பி. மட்டுமே உள்ளார். ரேபரேலி தொகுதியில் இருந்து சோனியா காந்தி மட்டுமே வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக உள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!