உத்தாகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் ஹல்த்வானி பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட வகுப்புவாத கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உத்தாகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் ஹல்த்வானி பகுதியில் நேற்று மாலை வகுப்புவாத கலவரம் ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பன்பூல்புராவில் "சட்டவிரோதமாக கட்டப்பட்ட" மதரஸா இடிக்கப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து பன்பூல்புராவில் மாவட்ட ஆட்சியர் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். வன்முறையில் ஈடுபடும் நபர்களை கண்ட உடன் சுடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நைனிடால் மாவட்ட மாஜிஸ்திரேட் வந்தனா இதுகுறித்து பேசிய போது“ பன்பூல்புரா வன்முறையில் இதுவரை மூன்று முதல் நான்கு பேர் இறந்துள்ளனர் 100 க்கும் மேற்பட்டவர்கள், குறிப்பாக காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர் என்றார். சட்டம் ஒழுங்கை பராமரிக்க ஹல்த்வானியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நகரத்தில் இணைய சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
undefined
ஹல்த்வானி வகுப்புவாத வன்முறை: என்ன காரணம்?
சட்டவிரோதமாக கட்டப்பட்ட மதரஸாவை இடித்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும், கற்களை வீசியதாகவும், இதில் குறைந்தது 100 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அங்கு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நகரின் பன்பூல்புரா பகுதியில் நடந்த வன்முறையில் காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்ளூர் மதரஸாவை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை ஊழியர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் காயமடைந்துள்ளனர். இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி பிரஹலாத் மீனா கூறியதாவது: அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மதரஸாவுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது.” என்று தெரிவித்தார்.
மேஜிஸ்திரேட் வந்தனா பேசிய போது “ பன்பூல்புரா காவல் நிலையத்திற்கு வெளியே நடந்த வன்முறையில் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவை சட்டவிரோதமா அல்லது சட்டப்பூர்வமான ஆயுதங்களா என்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. பதிலுக்கு, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் காயம் அடைந்த 3 முதல் 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இறந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. அவர்கள் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்தார்களா என்பதை அறிய நாம் காத்திருக்க வேண்டும். அல்லது அவர்களில் உள்ளவர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் பன்பூல்புரா காவல் நிலையத்தை கலவரக்காரர்கள் தீவைக்க முயன்றதாக வந்தனா கூறினார். மேலும் “ போலீசார் காவல் நிலையத்தில் இருந்தனர். இருப்பினும், காவல் துறையினர் அவர்களைக் கட்டுப்படுத்தி, காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. பின்னர் வன்முறை பன்பூல்புரா அருகே காந்தி நகர் பகுதிக்கும் பரவியது. இந்த வன்முறை "முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. கற்கள் வீடுகளில் முன்பே சேமித்து வைக்கப்பட்டது.
கலவரக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளை கூட பயன்படுத்தினர், தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது..பன்பூல்புராவில் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. துணை ராணுவ படைகளும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கை பராமரிக்க அண்டை மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீஸ் படையும் நகரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது," என்று கூறினார்.
முதல்வர் அவசர ஆலோசனை
தலைநகர் டேராடூனில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மூத்த அதிகாரிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் இந்த வன்முறை குறித்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது..