உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் இன்னும் 40 மணி நேரத்தில் மீட்கப்படுவார்கள்!!

By Dhanalakshmi G  |  First Published Nov 22, 2023, 11:17 AM IST

உத்தரகாசி சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்களை இன்னும் 40 மணி நேரத்தில் மீட்கப்படலாம் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு போதிய உணவுகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. 


உத்தரகண்ட் மாநிலத்தில் இருக்கும் உத்தரகாசியில் சுரங்கப்பாதை கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கடந்த 12ஆம் தேதி சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இது குகை அமைப்பைக் கொண்டு இருந்தது. இதில், பணியில் ஈடுபட்டு இருந்த 41 தொழிலாளர்கள் சிக்கினர். இவர்களை மீட்க முடியாமல் திணறிய நிலையில், தற்போது பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 

இடிந்து விழுந்த சுரங்கப்பாதைக்குள் இரும்புக் குழாய்களை துளையிட்டு செலுத்தி மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. கடுமையான முயற்சிக்கு பின்னர் 15 நாட்கள் கழித்து தொழிலாளர்களுக்கு உணவுகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக 57 மீட்டர் நீள, 6 இஞ்ச் அகல குழாயை தொழிலாளர்கள் இருக்கும் இடம் வரை பாறைகளைக் குடைந்து செலுத்தியுள்ளனர். இதன் வழியாகத்தான் தற்போது தொழிலாளர்களுக்கு உணவுகள் அனுப்பப்படுகிறது. புலாவ், மட்டர் பன்னீர் போன்ற உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களும் குழாய் வழியாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர்.

Tap to resize

Latest Videos

இவர்களுக்கு உணவு தயாரித்து வரும் சஞ்ஜீத் ராணா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்திருந்த பேட்டியில், ''சைவ புலாவ், மட்டர் பன்னீர், பட்டர் சப்பாத்தி ஆகியவை தயார் செய்தோம்'' என்று தெரிவித்துள்ளார். ஆறு இஞ்ச் அளவிலான குழாயில் பிளாஸ்டிக் பாட்டிலில் கிச்சடி, தாலியா போன்றவை தொழிலாளர்களுக்கு அனுப்ப முடியாது என்று நேற்று தேசிய ஹைவேஸ் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்து இருந்த நிலையில் சப்பாத்தி போன்ற உணவுகள் குழாய் வழியாக அனுப்பப்பட்டுள்ளன. இன்று ஆரஞ்ச், வாழைப்பழம், மருந்துகள் அனுப்பபட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் சிக்கிய இடத்தில் மருத்துவர்களும் உள்ளனர். ''யோகா செய்து, இருக்கும் இடத்தில் நடக்குமாறு தொழிலாளர்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். தொடர்ந்து தொழிலாளர்களின் நிலை மற்றும் பணிகள் குறித்து உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம்  பிரதமர் மோடி விசாரித்து வருகிறார்.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்து இருந்த தகவலில், ''தொழிலாளர்களுக்கு போதிய குடிநீர், ஆக்சிஜன், வெளிச்சம் சுரங்கப்பாதையில் இருக்கிறது. விபத்தில் சிக்கிய தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் சம்பவ இடத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் அங்கு நிறுவப்பட்டு இருக்கும் நான்கு இஞ்ச் குழாய் வழியாக தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு வருகின்றனர். புதிதாக கொண்டு வரப்பட்டு இருக்கும் இயந்திரங்கள் மூலம் தரைமட்டமாக குழாய்கள் பதிக்கப்படும்'' என்று குறிப்பிட்டு இருந்தனர். 

தொழிலாளர்கள் மீட்புத் திட்டத்தின்படி, சிக்கியுள்ள தொழிலாளர்கள் வெளியேற கிடைமட்ட துளையிடும் கருவிகளைப் பயன்படுத்தி 900 மிமீ குழாய்கள் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில், தொழில்நுட்பம், சாலை மற்றும் போக்குவரத்து கூடுதல் செயலாளர், மஹ்மூத் அகமது கூறுகையில், ''டெலஸ்கோப் முறையில் 900 மிமீ விட்டத்திற்கு பதிலாக 800 மிமீ விட்டம் கொண்ட குழாய்கள் செலுத்தப்பட்டு வருகிறது'' என்று தெரிவித்துள்ளார். 

சில்க்யாரா முதல் பார்கோட் வரையிலான கட்டுமானத்தில் உள்ள சுரங்கப்பாதையின் ஒரு பகுதி  கடந்த நவம்பர் 12 அன்று இடிந்து விழுந்தது. சில்க்யாரா அருகே 60 மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதையில் குப்பைகள் விழுந்ததால் 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். பார்கோட் பகுதியில் இன்னும் பணிகள் துவங்கப்படாத காரணத்தினால், அந்தப் பகுதி மூடப்பட்டுள்ளது. அந்த வழியாகவும் தொழிலாளர்கள் வெளியேற முடியாது. 

தற்போது, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்திய திபெத் எல்லை பாதுகாப்புப் படை,  ராணுவ பொறியாளர்கள், மாநில பேரிடர் நிவாரண நிதி, தீயணைப்பு, அவசர சேவைகள், எல்லைச் சாலைகள் அமைப்பு மற்றும் மத்திய அரசின் இதர தொழில்நுட்ப நிறுவனங்கள், மீட்புப் பணிகளில்  ஈடுபட்டு வருகின்றன. 

இன்னும் துளையிட வேண்டிய தொலைவு குறைவாக இருப்பதால் எப்படியும் இன்று அல்லது நாளைக்குள், 40 மணி நேரத்தில் மீட்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  

click me!