உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகள் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் இருந்து யமுனோத்ரி தாம் நகருக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சார்தாம் சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக, உத்தர்காசியில் இருந்து யமுனோத்ரி தாம் வரையிலான 26 கிலோ மீட்டர் தூரத்தை குறைக்கும் நோக்கத்தில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சில்க்யாரா - தண்டல்கான் பகுதியை இணைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டமும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தீபாவளி தினமான நேற்று காலை சில்க்யாரா பகுதியில் பெரும் விபத்து ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் சுமார் நான்கரை கிலோ மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வரும் நிலையில் அதில் 35 மீட்டர் நீளத்திற்கு சரிவு ஏற்பட்டுள்ளது.
சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து ஏற்பட்ட இந்த விபத்தில், சுரங்கத்திற்குள் வேலை செய்த 40 தொழிலாளர்களும் சிக்கி கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரம் சுரங்கப்பாதையில் சிக்கிய 40 தொழிலாளர்களின் நிலை என்ன என்பதும் தெரியவில்லை.
இந்த நிலையில், சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகள் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதிநவீன துளையிடும் இயந்திரங்கள் உதவியுடன் இடிபாடுகளை அகற்றும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் சுவாசிக்க வசதியாக குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுக்கு குடிநீர், உணவு ஆகியவையும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகை: சிவகாசியில் ரூ.6000 கோடிக்கு பட்டாசு விற்பனை!
சுரங்கத்தினுள் சிக்கியுள்ள தொழிலாளர்களுடன், மீட்புப் படையினர் தொடர்பை ஏற்படுத்தி அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை வழங்கியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்கி-டாக்கிகள் மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.“தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்கள் உணவு கேட்டனர், அது அவர்களுக்கு அனுப்பப்படுகிறது.” என்று சில்க்யாரா போலீஸ் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. உணவுப் பொட்டலங்கள் கம்ப்ரசர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், தொழிலாளர்கள் மீட்கப்பட்டால் அவர்களுக்கு முதலுதவி அளித்து மருத்துவமனை அழைத்துச் செல்ல மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஹெலிகாப்டர் மற்றும் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளன.
முன்னதாக, சுரங்க விபத்து நடந்த இடத்தை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி பார்வையிட்டார். சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களுடன் பேசியதாகவும், மீட்புப் பணிகள் நடைபெறுவதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், மீட்புப் பணிக்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் உறுதியளித்ததாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.