Uttarakhand Tunnel Collapse : உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் இடிந்து விழுந்த சுரங்கப்பாதையில் கடந்த நவம்பர் 12ம் தேதி சிக்கிய 41 கட்டுமானத் தொழிலாளர்களை மீட்கும் பணிகளில், மீட்பு படையினர் இடையறாது போராடி வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள தொடர் மழை மற்றும் வெப்பநிலை 4 டிகிரி செல்ஷியஸிற்கு குறைவாக சென்றதால், அங்கு ஏற்கனவே பல தடைகளை சந்தித்து வரும் மீட்பு படையினருக்கு அது கூடுதல் தடையாக மாறியுள்ளது. உத்தரகாண்டில் 4,000 மீட்டருக்கும் அதிகமான பகுதிகளில் பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது, இது மீட்புக் குழுவினரின் சவால்களை அதிகரிக்கிறது.
கடந்த நவம்பர் 12 அன்று சுரங்கம் இடிந்து விழுந்ததில் இருந்து தொழிலாளர்கள் சுமார் 4.5-கிலோமீட்டர் (3-மைல்) நீளமுள்ள சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளனர். மலைப் பகுதியில் இடியுடன் கூடிய மழை, ஆலங்கட்டி மழை மற்றும் குறைந்த வெப்பநிலையுடன் கூடிய பாதகமான வானிலை காரணமாக மீட்பு முயற்சிகள் இப்போது கூடுதல் சவால்களை எதிர்கொள்கின்றன. எவ்வாறாயினும், எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கத் தயாராக இருப்பதாக மீட்பு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.
"ஒவ்வொரு சூழ்நிலையிலும் பணியாற்றுவதில் அவர்கள் பயிற்சி பெற்றவர்கள், அதனால் எங்களுக்கு கவலை இல்லை" என்று NHIDCL நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மஹ்மூத் அகமது, செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். சுமார் 360 மணிநேரம் அதாவது கிட்டத்தட்ட 16 நாட்களுக்கும் மேலாக சுரங்கப்பாதையில் சிக்கியிருக்கும் 41 தொழிலாளர்கள் தங்கள் மீட்பிற்காக நீண்ட நேரம் காத்திருக்க நேரிடலாம்.
சுரங்கப்பாதைக்குள் தொழிலாளர்கள் நீண்டகாலமாக அடைக்கப்பட்டிருப்பது அவர்களின் உடல்நலம் மற்றும் மாநலம் குறித்து தீவிர கவலைகளை எழுப்புகிறது. அங்கு சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு விரிவான மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை மருத்துவர்கள் வலியுறுத்தினர், நீண்ட கால இப்படி ஒரே இடத்தில் அடைபட்டிருப்பது மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் மீட்பு செயல்முறைகள் தேவைப்படலாம் என்று அஞ்சுகின்றனர்.
ஒடிசாவை கலக்கும் தமிழர் வி.கே. பாண்டியன்: யார் இவர்? அரசியல் பின்னணி என்ன?
நேற்று தொடங்கிய செங்குத்து துளையிடும் பணி வியாழக்கிழமைக்குள் வெற்றிகரமாக முடிவடையும் என்று திரு. அகமது கூறினார், எதிர்பாராத தடைகள் எதுவும் எழவில்லை. நுண் சுரங்கப்பாதை நிபுணர் கிறிஸ் கூப்பர் இன்று கூறுகையில், ஆகர் இயந்திரத்தில் இருந்து குப்பைகள் அகற்றப்பட்டுவிட்டதாகவும், இன்னும் சில மணிநேரங்களில் கைமுறையாக துளையிடும் பணி தொடங்கும் என்றார்.