முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் பிஜூ ஜனதாதளம் கட்சியில் இணைந்துள்ளார்
ஒடிசா முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான தமிழ்நாட்டை சேர்ந்த வி.கே.பாண்டியன் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் முன்னிலையில் இன்று பிஜூ ஜனதா தளம் கட்சியில் இன்று இணைந்தார். முதல்வர் நவீன் பட்நாயக்கின் முதன்மை செயலாளராக பதவி வகித்த அவர், அண்மையில் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது.
விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே, கேபினட் அமைச்சர் அந்தஸ்து கொண்ட, ஆளும் பிஜூ ஜனதா தளம் அரசின் பல்வேறு செயல்பாடுகளை ஒருங்கிணைக் கூடிய 5T மற்றும் நபின் ஒடிசா திட்டத்தின் தலைவராக வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், பிஜூ ஜனதா தளம் கட்சியில் அவர் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அவரது இணைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வாய்ப்பிருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியன் ஒடிசா கேடர் 2000ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியாவார். காலாஹண்டி மாவட்டத்தில் உள்ள தர்மகர் உதவி ஆட்சியராக 2002ஆம் ஆண்டில் தனது பணியை தொடங்கிய அவர், விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு, நெல் கொள்முதலை ஒழுங்குபடுத்தினார்.
பின்னர், பொதுப்பணித் துறைகளின் மறுவாழ்வுக்காக குடியரசுத் தலைவரிடமிருந்து தேசிய விருதைப் பெற்றார். அப்போதுதான் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதற்கான ஒற்றைச் சாளர முறை தேசிய முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்டு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, 2005ஆம் ஆண்டில், மயூர்பஞ்ச் மாவட்ட ஆட்சியராக வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட்டார். அங்கு அவரது பணி நக்சலிசத்தின் பரவலைக் குறைக்க அரசு நிர்வாகம் எவ்வாறு செயல்பட முடியும் என்பதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. 2007ல் கஞ்சம் மாவட்ட ஆட்சியராக பாண்டியன் நியமிக்கப்பட்டார். மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காகப் பல ஆண்டுகள் பணியாற்றியதற்காக ஹெலன் கெல்லர் விருதையும் அவர் பெற்றுள்ளார்.
சென்னை, பெங்களூருக்கு நிகராக சேலம்: மீண்டும் 8 வழிச்சாலை - சி.பி.ராதாகிருஷ்ணன் தகவல்!
கஞ்சம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பணியாற்றுவதற்கான தேசிய விருதை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடமிருந்து அவர் பெற்றார். கஞ்சம் மாவட்டத்துக்கு ஊரக வேலைவாய்ப்பில் நாட்டிலேயே சிறந்த மாவட்டத்திற்கான தேசிய விருதையும் இரண்டு முறை அவர் பெற்று தந்துள்ளார். அவரது பணிக்காலத்தில்தான் அந்த திட்டத்துக்கான ஊதியம் தொழிலாளர்களுக்கு வங்கியில் வரவு வைக்கப்பட்டது. பின்னர், நாடு முழுவதும் அது விரிவு படுத்தப்பட்டது.
கஞ்சம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது முதல்வர் நவீன் பட்நாயக்கின் குட் புக்கில் இடம் பெற்ற வி.கே.பாண்டியன், அவருக்கு நெருக்கமானவராக் மாறினார். இதன் மூலம், 2011ஆம் ஆண்டில் முதல்வரின் தனிச் செயலாளராகப் பொறுப்பேற்றார். அன்று முதல் விருப்ப ஓய்வு பெறும் வரை, நவீன் பட்நாயக் ஆட்சி காலத்தில் பாதிக்காலம் அவரது தனிச் செயலாளராக வி.கே.பாண்டியன் பதவி வகித்துள்ளார்.
2019ஆம் ஆண்டில் நவீன் பட்நாயக் ஐந்தாவது முறையாக முதலமைச்சரான பிறகு, அரசுத் துறைகளில் சில மாற்றங்களைச் செயல்படுத்த '5T செயலாளர்' கூடுதல் பொறுப்பு வி.கே.பாண்டியனுக்கு வழங்கப்பட்டது. அரசியல் ஆதாயங்களுக்காக தனது பதவியை தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சட்டுகளுக்கு உள்ளாகி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிய வி.கே.பாண்டியன், நிரந்தர அரசியல்வாதியாகவே மாறியுள்ளார்.