உத்தரகாண்ட் மாநில சுரங்க விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க எஸ்கேப் டனல் எனப்படும் சிறிய சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன
சார்தாம் சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் இருந்து யமுனோத்ரி தாம் நகருக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சில்க்யாரா - தண்டல்கான் பகுதியை இணைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டமும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தீபாவளி தினமான நேற்று முன் தினம் காலை சில்க்யாரா பகுதியில் பெரும் விபத்து ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் சுமார் நான்கரை கிலோ மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வரும் நிலையில், சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், சுரங்கத்திற்குள் வேலை செய்த 40 தொழிலாளர்களும் சிக்கி கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்பது அங்கிருந்து வரும் நற்செய்தி.
இந்த நிலையில், சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணிகள் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேசமயம், உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் சுவாசிக்க வசதியாக குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுக்கு குடிநீர், உணவு ஆகியவையும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மீட்பு பணிகள் குறித்து உத்தர்காசி மாவட்ட ஆட்சியர் அபிஷேக் ரோஹில்லா கூறுகையில், “மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குழாய் மூலம் பாதுகாப்பு பாதை அல்லது சிறிய சுரங்கப்பாதை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு தேவையான பொருட்கள் வந்துள்ளன. அவர்களுக்கான பிளாட்ஃபார்ம் தயாரிக்கப்படுகிறது. அதன்பிறகு எஸ்கேப் டன்னல் அமைக்கும் பணியும் தொடங்கப்படும்.” என்றார்.
கூகுளில் தீபாவளி பற்றி அதிகம் தேடப்பட்ட 5 கேள்விகள் இவைதான்.. சுந்தர் பிச்சை சொன்ன தகவல்..
“அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், உள்ளே சிக்கியிருப்பவர்களுடன் தொடர்ந்து தொடர்பு ஏற்படுத்த முடிவதாக என்எச்ஐடிசிஎல் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொழிலாளர்கள் மீட்கப்பட்டால் அவர்களுக்கு முதலுதவி அளித்து மருத்துவமனை அழைத்துச் செல்ல மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஹெலிகாப்டர் மற்றும் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளன.