
பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் பித்தோர்கார்க் மாவட்டத்தில் 11 பேருடன் சென்றுக்கொண்டிருந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும் மீட்பு குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 9 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்துக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.