அங்குஷ் தத்தா என்பவர் டெல்லியில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் கட்டணமே செலுத்தாமல் 2 ஆண்டுகள் தங்கியுள்ளார். அவரது மோசடிக்கு ஹோட்டல் ஊழியரே உதவியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் இரண்டு ஆண்டுகள் தங்கிவிட்டு, ஒரு பைசாகூட கட்டணம் செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார். டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஏரோசிட்டியில் ரோஸேட் ஹவுஸ் (Roseate House) என்ற 5 நட்சத்திர ஹோட்டலில் தான் இந்த சம்பவம் நடத்துள்ளது.
2019ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி அங்குஷ் தத்தா என்பவர் இந்த ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். மறுநாளே காலி செய்துவிடுவதாகச் சொல்லி அறை எடுத்துக்கிறார். ஆனால், 2021ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி வரை அங்கேயே தங்கிய அவர், ஒரு ரூபாய்கூட கட்டணமாகச் செலுத்தாமல் ஏமாற்றியுள்ளார்.
இரண்டு வருடங்களில் மொத்தம் 603 நாட்கள் அந்த ஹோட்டலில் தங்கிய அங்குஷ் ரூ.58 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், ஒரு ரூபாய்கூடச் செலுத்தாமல் கம்பி நீட்டிவிட்டார். இதைப்பற்றி தெரியவந்ததும் ஹோட்டல் நிர்வாகத்தினர் காவல்துறையில் புகார் கொடுத்தனர்.
விசாரணையில், அங்குஷ் கட்டணம் செலுத்தாமல் ஏமாற்ற, ஹோட்டலில் பணிபுரிந்த ஒருவரே உதவியது தெரியவந்ததுள்ளது. ஹோட்டல் கட்டணங்கள், நிலுவைத் தொகையைக் கண்காணிக்கும் பிரேம் பிரகாஷ் என்பவர் அங்குஷ் தத்தாவுக்கு உதவியிருக்கிறார். இவரைத் தவிர வேறு சிலரும் உதவி இருக்க வேண்டும் என ஹோட்டல் நிர்வாகத்தினர் சந்தேகிக்கின்றனர்.
பிரேம் பிரகாஷ் அங்குஷ் கொடுக்கவேண்டிய நிலுவைத் தொகை பற்றி மேல் அதிகாரிக்குத் தெரிவிக்காமல் மறைத்து, கணினியில் உள்ள கணக்குகளையும் மாற்றியுள்ளார். அங்குஷ் செலுத்தவேண்டிய கட்டணத்தை மற்றவர்களின் பெயரில் சேர்த்து கணக்கு சரியாக இருப்பது போல தோன்றச் செய்துள்ளார்.
அங்குஷ் தத்தா கட்டணமாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ரூ.10 லட்சம், ரூ.7 லட்சம் மற்றும் ரூ.20 லட்சம் என மொத்தம் 37 லட்சம் ரூபாய்க்கான காசோலையைக் கொடுத்திருக்கிறார். அந்த காசோலைகள் எல்லாம் பணம் இல்லாமல் பவுன்ஸ் ஆகி திரும்ப வந்துவிட்டன. இதையும் பிரேம் பிரகாஷ் மூடி மறைத்துவிட்டார்.
இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஹோட்டல் நிர்வாகம் காவல்துறையில் புகார் கூறியுள்ளது. அதன்படி, காவல்துறையினர் அங்குஷ் தத்தா மற்றும் பிரேம் பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.