
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு பள்ளியில் மாணவனை மசாஜ் செய்யச் சொன்ன ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ளது போகரி ஆரம்பப் பள்ளி. இந்தப் பள்ளியைச் சேர்ந்தவர் ஆசிரியை ஊர்மிளா சிங், மாணவர்களுக்கு படிப்பை கற்பிக்காமல். தனக்கு மசாஜ் செய்யுமாறு மாணவனை மிரட்டியுள்ளார். மாணவனும் பயந்து, அவருக்கு கையில் மசாஜ் செய்துள்ளார்.
இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு கையில் தண்ணீர் பாட்டில் ஒன்று வைத்துக் கொண்டு சேரில் அமர்ந்து இருக்கிறார் ஆசிரியை ஊர்மிளா. மாணவன் ஒருவர் அவருக்கு கையில் மசாஜ் செய்து விடுகிறார். ஆர்வமாக தண்ணீர் குடிக்கிறார் ஆசிரியை. தனக்கு மசாஜ் செய்யும் மாணவனிடம் அவ்வப்போது பேசிக் கொண்டும் இருக்கிறார்.
ஒரு மாணவர் ஆசிரியை ஊர்மிளாவுக்கு மசாஜ் செய்து கொண்டு இருக்கும்போது மற்ற மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே செல்கின்றனர். அவருக்கு மசாஜ் செய்வதையும் வேடிக்கை பார்க்கின்றனர். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து ஆசிரியை ஊர்மிளா சிங் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 27ஆம் தேதி நடந்துள்ளது.