
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு அதிகபட்சம் தூக்கு தண்டனை அல்லது ஆயுள்தண்டனை விதிக்க அவசரச்சட்டத்தை அந்த மாநில அரசு கொண்டு வர உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாரயம் குடிப்பதால் இறப்பவர்கள், கண், உடல் உறுப்புகளை இழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலமான அரியானாவில் இருந்து கள்ளத்தனமாக கொண்டு வரப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் ஆசம்கார்க் மாவட்டத்தில் 17 பேரும், லக்னோவில் 28 பேரும் இறந்தனர். மேலும், இட்டா, பருக்காபாத் மாவட்டங்களில் 30 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமைகள் ஆணையமும் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இதையடுத்து, கள்ளச்சாராயத்தை குடிப்பதன் மூலம் உயிர் இழப்பு, நிரந்தர உடல் உறுப்பு இழப்பு போன்றவை ஏற்பட்டால், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கும் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டத்தை கொண்டு வர உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
இந்த சட்டம் ஏற்கனவே டெல்லி, குஜராத் மாநிலங்களில் இருப்பதால், 3-வது மாநிலமாக உத்தரப்பிரதேசம் கொண்டு வருகிறது.
இது குறித்து உ.பி. மாநில கலால்வரித்துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் நிருபர்களிடம் கூறியதாவது-
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. அதில் முக்கிய விஷயமாக, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்காக அரசு அவசரச்சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றும். சட்டசபைக் கூடும்போது, இது சட்டமாக நிறைவேற்றப்படும்.
கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கும் நோக்கில் ஏற்கனவே இருக்கின்ற சட்டங்களோடு வாழ்நாள் சிறை தண்டனை விதிப்பது அல்லது தூக்கு தண்டனை விதிப்பது போன்ற சட்டங்களும் அவசரச்சட்டம் மூலம் சேர்க்கப்டும். குற்ற வழக்கின் அடிப்படையைப் பொருத்து தூக்கு தண்டனை விதிக்கப்படும். மேலும், ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவாகவும் திருத்தம் செய்யப்படும்.
மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக தூக்கு தண்டனை, அல்லது வாழ்நாள் சிறை, அபராதமாக ரூ.10 லட்சம் அல்லது இரு தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த 2011ம் ஆண்டு குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது, கள்ளச்சாராயம் விற்பனையாளர்களுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்கும் முறையைக் கொண்டு வந்தார். அதை இப்போது உத்தரப்பிரதேச அரசும் பின்பற்றுகிறது.