
மொஹரம் பண்டிகை அன்று துர்கா சிலைகளை கரைக்கக்கூடாது என்ற மம்தா பானர்ஜியின் உத்தரவை ரத்து செய்தது கல்கத்தா உயர்நீதிமன்றம். மேலும், மதசார்பின்மை என்றால் என்ன? என்று மம்தாவுக்கு பாடம் நடத்தியது கோல்கத்தா உயர்நீதிமன்றம். ஒரு மதத்தவரை திருப்தி செய்ய இன்னொரு மதத்தவரின் வழிபாட்டு உரிமையைப் பறிக்கக் கூடாது என மம்தாவிற்கு கண்டனத்தை தெரிவித்துள்ளது நீதிமன்றம்.
மேற்குவங்கத்தில் ஆண்டு தோறும் பிரசித்தி பெற்ற துர்கா பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். துர்கா சிலைகள் கரைக்கும் நிகழ்வு செப். 30ஆம் தேதி விஜயதசமி அன்று நடக்கிறது. மறு நாள் அக்டோபர் 1ஆம் தேதி மொஹரம் பண்டிகை வருவதால், செப்.30ஆம் தேதி மாலை 6 மணிக்குப் பிறகு துர்கை சிலைகளை கரைக்கக் கூடாது என முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவு பிறப்பித்தார்.
மம்தா பானர்ஜியின் இந்த உத்தரவை எதிர்த்து கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் ராகேஷ் திவாரி, ஹரீஷ்டாண்டன் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று இந்த வழக்கை விசாரித்தது.
அப்போது, “சிலைக் கரைப்பு வைபவம் இந்துக்கள் ஆண்டாண்டு காலமாக நடத்தி வருவது. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டது. இது அவர்களின் உரிமையை மீறுவது”: என்று கூறினர்.
அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கிஷோர் தத்தா, “அக்டோபர் 1ஆம் தேதி முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான மொஹரம் என்பதால், இரு தரப்பினரிடையே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும். சட்டம், ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” என வாதிட்டார்.
இதை அடுத்து நேற்று நீதிபதிகள் கூறிய போது, இரு பிரிவினரும் நல்லிணக்கத்துடன் பண்டிகையைக் கொண்டாட உள்ள நிலையில். நீங்களே ஏன் மதத்தின் பெயரில் பிரித்துப் பார்க்கிறீர்கள். இரு பிரிவினரும் அவரவர்களுக்குரிய வழக்கத்தை செய்யவிடுங்கள்” என்று வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இன்று இவ்வழக்கை விசாரித்த கோல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி ராகேஷ் திவாரி, சிலைக் கரைப்பு தொடர்பாக மம்தா பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். “ஏதாவது அசம்பாவிதம் நடைபெறும் என்று கற்பனை செய்து கொண்டு நீங்களாக கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது. இரு மதங்களின் ஊர்வலத்தின் போது அமைதியைப் பேணிக் காக்க வேண்டியது போலீசாரின் கடமை. சிலைகளை அதிகாலை 1.30 மணி வரை எப்போது வேண்டுமானாலும் கரைக்கலாம்” எனக் கூறினார்.
மக்களின் மத நம்பிக்கையில் குறுக்கிடக்கூடாது என்றும், அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.
முன்னர் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய மம்தா பேனர்ஜி, இந்த மாநிலத்தில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ்கிறார்கள் என்று கூறியிருந்தார். ஒரு மாநிலத்தின் தலைமைதான் இப்படிச் சொன்னது, போலீஸ் அதிகாரியல்ல. என்று கூறிய நீதிமன்றம், பின்னர் ஏன் இவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியது.
முன்னதாக ஐந்து நாள்கள் நடைபெறும் இந்த பூஜையின் இறுதி நாளில் சிலைக் கரைப்பு தொடர்பாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை எதிர்த்து 3 விதமான வெவ்வேறு மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.