சீருடை அணியாத போலீசார் மார்க்கெட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது குடிபோதையில் ரகளை செய்த நபரைப் பார்த்து, உடனடியாக அவரை ஷூவால் அடி வெளுத்துவிட்டார்.
உத்தர பிரதேசத்தில் சீருடை அணியாத போலீஸ்காரர் ஒருவர், மது போதையில் ரகளை செய்த நபரைப் பிடித்து தனது ஷூவால் கொடூரமாகத் தாக்கும் வீடியோ காவல்துறை அதிகாரிகளின் மீது சீற்றத்தைத் தூண்டியுள்ளது. இந்த சம்பவம் மாநில தலைநகர் லக்னோவில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள ஹர்டோயில் நடந்துள்ளது.
தினேஷ் என அடையாளம் காணப்பட்ட அந்த போலீஸ்காரர் நான்கு நிமிடங்களில் 38 முறை அந்த போதை ஆசாமியின் முகத்திலும் தலையிலும் உடலிலும் பலமுறை அடித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து அவர் உடனடி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
செமத்தியாக அடி வாங்கிய போதை ஆசாமி, குடிபோதையில் உள்ளூர் கடையில் வருவோர் போவோரிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலில் கமலஹாசன் போட்டி! மநீம துணைத் தலைவர் தங்கவேலு பேட்டி
"வைரலான வீடியோவை போலீசார் கவனத்தில் எடுத்து விசாரித்தனர். அந்த கான்ஸ்டபிள் சாதாரண உடையில் மார்க்கெட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது வழியில் இருந்த கடையில் ஒரு நபர் குடிபோதையில் மக்களிடம் தவறாக நடந்துகொண்டிருந்தார். அவரைத் இவர் தட்டிக்கேட்டபோது, இவரிடமும் தவறாக நடந்துகொண்டிருக்கிறார். இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. கான்ஸ்டபிள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்" என காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் துர்கேஷ் குமார் சிங் சொல்கிறார்.
இந்த வார தொடக்கத்தில், காவல்துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் பியூஷ் மோர்டியா நடந்திய ஒரு ஆய்வுக் கூட்டத்தின் போது, போலீசார் பொதுமக்களை நியாயமான மற்றும் கண்ணியமான முறையில் நடத்தவேண்டும் என அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.