
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், சிஆர்பிஎஃப் ஹைதராபாத்தின் ஆண்கள் கிளப், குரூப் சென்டரில் நாளை நடைபெறும் 8ஆவது வேலைவாய்ப்பு மேளாவில் உரையாற்ற உள்ளார்.
இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்குகிறார். சமீபத்தில் பணியில் சேர்ந்த 51,000 பேருக்கு பணி நியமனக் கடிதங்களை அவர் வழங்க உள்ளார்.
முன்னதாக, கடந்த ஜூலை மாதம், சென்னையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு மேளாவில், கலந்து கொண்ட இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அரசு வேலைகளில் "சேவை" அல்லது பொது சேவை என்ற புதிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்துவதற்கான பிரதமர் மோடியின் கருத்தை வலியுறுத்தினார். ஆட்சி மற்றும் அரசு வேலைகளை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பற்றியும் அவர் பேசினார்.
மத்தியப் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு மேளாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, புதிதாக நியமிக்கப்பட்ட 5,800 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களைப் பாராட்டியதோடு, தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் அவர்களின் பங்கு எவ்வாறு முக்கியமானது என்பதை எடுத்துரைத்தார். பாரம்பரிய அறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு சமமான முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், தொடக்கக் கல்வியில் ஒரு புதிய பாடத்திட்டத்தின் வளர்ச்சியைக் குறிப்பிட்டார்.
'ரமணா' பட பாணியில் மத்திய அரசு ஊழல் - உதயநிதி ஸ்டாலின்!
நாடு முழுவதும் 44 இடங்களில் வேலைவாய்ப்பு மேளா நடைபெற்றது. மத்திய அரசுத் துறைகள், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய இந்த ஆட்சேர்ப்பு இயக்கம், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிப்பதற்கான உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி, 10 லட்சம் அரசு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான இயக்கத்தைக் குறிக்கும் வகையில் 'வேலைவாய்ப்பு மேளா' பிரச்சாரத்தைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.