சிஏஏ சட்டம்: மத்திய அரசு விளக்கம்!

By Manikanda Prabu  |  First Published Mar 12, 2024, 2:19 PM IST

குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது


நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) கடந்த 2019ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.  பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், ஜெயின் மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது. ஆனால், இதில் இஸ்லாமியர்கள், இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வந்தவர்கள் இதில் இடம்பெறவில்லை. 

குடியுரிமை பெற மதம் முக்கிய காரணியாக இருப்பது, இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பது, பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என அஞ்சுவது, இலங்கையில் இருந்து தமிழகத்தில் குடியேறிய அகதிகளை இடம்பெறாதது என்பன உள்ளிட்ட சிஏஏ சட்டத்தில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

Latest Videos

undefined

தமிழகத்தில் சிஏஏ அமல்படுத்தப்படாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!

இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு நேற்று மாலை அறிவிப்பானை வெளியிட்டது. இதுதொடர்பான விதிமுறைகளும் பட்டியலிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளாது. கடந்த 2019ஆம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்ட நிலையில், 4 ஆண்டுகள் கடந்து நேற்று திடீரென சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த சட்டத்தை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. ஏராளமான அரசியல்க் கட்சித் தலைவர்கள் மத்திய பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

“இந்தியாவில் அமலாகும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தால், இந்தியர்கள் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது. அண்டை நாட்டை சேர்ந்த சிறுபான்மை சமூக மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியா அமல்படுத்துகிறது” என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

click me!