ஆந்திராவில் பாஜக, தெலுங்கு தேசம், ஜனசேனா ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளன
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 370 இடங்களில் தனியாகவும், கூட்டணியுடன் சேர்ந்து 400 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ள பாஜக, மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க முனைப்பு காட்டி வருகிறது.
அந்த வகையில், ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம், ஜனசேனா ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அம்மாநிலத்தில் ஆளுங்கட்சியான ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் கட்சி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளுடன் பாஜக இணக்கமாக இருந்த நிலையில், யாருடன் அக்கட்சி கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
undefined
இதனிடையே, தெலுங்கு தேசம், ஜன சேனா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படுவதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடந்த 9ஆம் தேதி அறிவித்தார். அதன்படி, எதிர்வரவுள்ள மக்களவை தேர்தல், ஆந்திர சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக, தெலுங்கு தேசம், ஜனசேனா ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடவுள்ளன. அம்மாநிலத்தில் மொத்தம் 25 மக்களவை, 175 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
இந்த நிலையில், ஆந்திராவில் பாஜக, தெலுங்கு தேசம், ஜனசேனா ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளன. அதன்படி, பாஜக 6 மக்களவை தொகுதி, 10 சட்டமன்றத் தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் கட்சி 17 மக்களவை, 144 சட்டமன்றத் தொகுதிகளிலும், ஜனசேனா 2 மக்களவை, 21 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரக்கு, ராஜமுந்திரி, அனகாபல்லி, திருப்பதி, நரசபுரம் ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிட வாஉப்புள்ளதாகவும், மச்சிலிப்பட்டினம், காக்கிநாடா ஆகிய தொகுதிகளில் ஜனசேனா கட்சி போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2018ஆம் ஆண்டு வரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த தெலுங்கு தேசம், ஆந்திர மாநிலத்திற்கு நிதியுதவி அளிக்காததால் எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. கூட்டணியில் இருந்து வெளியேறியபோது, சுயநலனுக்காக அல்ல; ஆந்திராவின் நலனுக்கான இந்த முடிவை எடுப்பதாக தெரிவித்தார். ஆனால், 2019 தேர்தலில் படுதோல்வி அடைந்த பிறகு மீண்டும் பாஜகவுன் கூட்டணி அமைக்க தெலுங்கு தேசம் விருப்பம் தெரிவித்தது. பாஜக - தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் உறவானது மிகவும் பழமையானது. 1996 ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த தெலுங்கு தேசம், அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கங்களில் ஒன்றாக இணைந்து பயணித்துள்ளது.
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா; அமைச்சரவையும் கலைப்பு - என்ன காரணம்?
பாஜக - தெலுங்கு தேசம் - ஜனசேனா கூட்டணி குறித்து பேசிய முதல்வர் ஜெகன் மோகன், அக்கூட்டணியை எதிர்த்து போராட தயாராக இருப்பதாகவும், சந்திரபாபு நாயுடு துருப்பிடித்த பழைய சைக்கிள் எனவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஆந்திராவில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்றது, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அந்த தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்டன.
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி 49.89 சதவீத வாக்குகளும், தெலுங்கு தேசம் 40.19 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் 1.31 சதவீத வாக்குகளும், பாஜக 0.98 சதவீத வாக்குகளும் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.