பொதுத்துறை வங்கிகளின் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் உயருமா? மத்திய அரசு பதில்!

By Manikanda Prabu  |  First Published Dec 18, 2023, 3:45 PM IST

பொதுத்துறை வங்கிகளின் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் உயருமா என்ற கேள்விக்கு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளது


நாடாளுமன்ற மக்களவையில், “பொதுத்துறை வங்கிகளில் (PSBs) நவம்பர் 2002க்கு முந்தைய ஓய்வூதியதாரர்களின் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா? அப்படியானால், அதன் விவரங்களைத் தருக?; பொதுத்துறை வங்கிகளின் ஓய்வூதிய உயர்வு விவகாரத்தில் நிதி அமைச்சகத்தின் தற்போதைய நிலைப்பாடு என்ன?; பொதுத்துறை வங்கிகளின் ஓய்வூதிய உயர்வு விவகாரத்தை ஆராய அமைக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்ததா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?” ஆகிய கேள்விகளை விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் எழுப்பினார்.

அதற்கு நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கரட் பதிலளித்துள்ளார். அதில், “பொதுத்துறை வங்கிகளில் 1.11.2002க்கு முன்பு ஓய்வு பெற்ற அனைவருக்கும் ஒரே விதமான அகவிலை நிவாரணத்தை (DR)  01.10.2023 முதல் வழங்குமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தும்படி இந்திய வங்கிகள் சங்கத்துக்கு ( IBA) 05.10.2023 தேதியிட்ட கடிதத்தின் மூலம் அரசு தெரிவித்துவிட்டது. 

Tap to resize

Latest Videos

தென் மாவட்ட கனமழை: மீட்பு பணிகளில் இந்திய ராணுவம் - தமிழக அரசு தகவல்!

பொதுத்துறை வங்கிகளில் இருதரப்பு ஒப்பந்தங்களின்மூலம் புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, அந்தந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வாரியங்கள், வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்துதல் மற்றும் இடமாற்றம்) சட்டம், 1970/1980ன் பிரிவு 19ன் கீழ் தங்களின் அதிகாரங்களைப் பயன்படுத்தி ஊழியர்களின் ஓய்வூதியத் திட்ட விதிமுறைகளை உருவாக்கின. இந்த விதிமுறைகளில் ஓய்வூதியத்தைத் திருத்துவதற்கான ஏற்பாடு இல்லை. இருப்பினும், வங்கிகளில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஓய்வூதியத்தில் அகவிலை நிவாரணம் (DR ) வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அது அரையாண்டுக்கு ஒருமுறை என்ற அடிப்படையில் உயர்த்தப்படுகிறது.

இந்திய வங்கிகள் சங்க (IBA ) வழிகாட்டுதலின்படி, பொதுத்துறை வங்கிகளின் ஓய்வூதிய உயர்வு  விஷயத்தை ஆராய அமைக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. தற்போது இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் இதுகுறித்துப் பேச முடியாது.” இவ்வாறு அமைச்சர் தன் பதிலில் தெரிவித்துள்ளார்.

click me!