அறிவியல் துறையில் புதிய தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் துறையில் ‘தேசிய அறிவியல் விருதுகள்’ (ராஷ்டிரிய விக்யான் புரஸ்கார்) என்ற பெயரில் புதிய தேசிய விருதுகளை அரசு அறிவித்துள்ளது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகளின் பல்வேறு துறைகளில் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் தனித்தனியாக அல்லது குழுக்களாக செய்த குறிப்பிடத்தக்க மற்றும் ஊக்கமளிக்கும் பங்களிப்பை அங்கீகரிப்பதே தேசிய அறிவியல் விருதின் நோக்கமாகும்.
தேசிய அறிவியல் விருது இந்தியாவில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புத் துறையில் மிக உயர்ந்த அங்கீகாரங்களில் ஒன்றாகும். அரசு, தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கண்டுபிடிப்பாளர்கள் அல்லது எந்தவொரு நிறுவனத்திற்கும் வெளியே பணிபுரியும் தனி நபரும், அறிவியல், தொழில்நுட்பம் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகளின் எந்தவொரு துறையிலும் முன்னோடி ஆராய்ச்சி அல்லது கண்டுபிடிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தனித்துவமான பங்களிப்பை வழங்கிய தனி நபரும் இந்த விருதுகளுக்கு தகுதியுடையவர்கள்.
undefined
இந்திய சமூகங்கள் அல்லது சமூகத்திற்கு பயனளிக்கும் அசாதாரண பங்களிப்புகளுடன் வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரும் இந்த விருதுகளுக்கு தகுதியுடையவர்கள். விருதுகள் பின்வரும் நான்கு பிரிவுகளில் வழங்கப்படவுள்ளன.
** அறிவியல் ரத்னா விருது - அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எந்தவொரு துறையிலும் செய்யப்பட்ட வாழ்நாள் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும்.
** அறிவியல் ஸ்ரீ விருது - அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எந்தவொரு துறையிலும் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும்.
** அறிவியல் இளையோர் -சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது - அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எந்தவொரு துறையிலும் அசாதாரண பங்களிப்பை வழங்கிய 45 வயது வரையிலான இளம் விஞ்ஞானிகளை அங்கீகரித்து ஊக்குவிக்கும்.
** அறிவியல் குழு விருது - அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எந்தவொரு துறையிலும் ஒரு குழுவில் பணியாற்றி அசாதாரண பங்களிப்பை வழங்கிய மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் / ஆராய்ச்சியாளர்கள் / கண்டுபிடிப்பாளர்கள் அடங்கிய குழுவுக்கு வழங்கப்படும்.
இந்திய நாடாளுமன்றப் பயணத்தின் பொற்காலம்: எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
இயற்பியல், வேதியியல், உயிரியல் அறிவியல், கணிதம் மற்றும் கணினி அறிவியல், புவி அறிவியல், மருத்துவம், பொறியியல் அறிவியல், வேளாண் அறிவியல், சுற்றுச்சூழலியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு, அணுசக்தி, விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய 13 துறைகளில் தேசிய அறிவியல் விருதுகள் (ராஷ்டிரிய விக்யான் புரஸ்கார்) வழங்கப்படும். பாலின சமத்துவம் உட்பட ஒவ்வொரு களம் / துறையிலிருந்தும் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய அறிவியல் விருதுகளுக்கு பெறப்படும் அனைத்து பரிந்துரைகளும் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் தலைமை வகிக்கும் தேசிய அறிவியல் விருதுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும். இந்த விருதுகளுக்கான பரிந்துரைகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14ஆம் தேதி வரவேற்கப்படும். இது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 (தேசிய அறிவியல் தினம்) வரை பெறப்படும்.
இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் மே 11ஆம் தேதி (தேசிய தொழில்நுட்ப தினம்) அறிவிக்கப்படும். அனைத்து வகை விருதுகளுக்கான விருது வழங்கும் விழா ஆகஸ்ட் 23ஆம் தேதி (தேசிய விண்வெளி தினம்) அன்று நடைபெறும். அனைத்து விருதுகளுக்கும் ஒரு சான்றிதழ் மற்றும் ஒரு பதக்கம் வழங்கப்படும்.